பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு; நொறுக்கப்பட்ட வாகனங்கள்: கோவையில் தொடரும் பதற்றம்

பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு; நொறுக்கப்பட்ட வாகனங்கள்: கோவையில் தொடரும் பதற்றம்

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், பாஜக நிர்வாகிகள் வீட்டிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் பாஜக- திமுக மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. போஸ்டர் யுத்தம், போராட்டங்கள், கைது, கண்டன அறிக்கை என நாளுக்கு நாள் இருதரப்பிலும் மோதல்கள் தீவிரமடையத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா இழிவாகப் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு 8.40 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி சென்றார். வெடிக்காக அந்த பெட்ரோல் குண்டை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர்ப் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. பாஜக மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு கார், இரண்டு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in