பெட்ரோல், கியாஸ் விலை குறைப்பில் வீண் பிடிவாதம் கூடாது!

பாஜக இயக்குநர் பேரரசு பளிச்
பெட்ரோல், கியாஸ் விலை குறைப்பில் வீண் பிடிவாதம் கூடாது!

‘சின்ன டி.ஆர்!’ என்று திரைத் துறையினரால் செல்லமாக அழைக்கப்படும் இயக்குநர் பேரரசு, 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்களுடன் அரசியல்' என்றும் டைட்டில் போட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. பாஜகவில் சேர்ந்த பின்னர் ட்விட்டரில் மட்டும் 'பஞ்ச்' டயலாக் அடித்துக்கொண்டிருக்கும் அவரை, 'காமதேனு' மின்னிதழுக்காகத் தொடர்புகொண்டேன். அவரது பேட்டி:

இந்த ஒன்றரை ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறதா?

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்றார்களே, அவர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்கும் அளவுக்கு பாஜக வளர்ந்திருக்கிறது. குளம் முழுக்க மலரவில்லை என்றாலும் குளம் முழுக்க கொடி வீசி ஆங்காங்கே மலரவும் செய்திருக்கிறது தாமரை. இதுவே எங்களுக்கு வெற்றிதான். அடித்தட்டு மக்கள் வரைக்கும் கட்சியும், அதன் சித்தாந்தங்களும் போய்ச் சேர்ந்திருப்பதுடன், தமிழகத்தின் மூன்றாவது பெருங்கட்சியாகவும் அது உருவெடுத்திருக்கிறது.

நீங்கள் எல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்தும்கூட திமுக வெற்றிபெற்றுவிட்டதே?

அதிமுகவைவிட திமுக நல்ல கட்சி; திறமையான கட்சி; மக்களுக்கு சேவை செய்யும் என்ற அடிப்படையில் எல்லாம் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து 2 முறை அதிமுக ஆண்டுவிட்டது, அடுத்து திமுக ஆளட்டுமே என்கிற மக்களின் மனநிலைதான் அதன் வெற்றிக்குக் காரணமே தவிர, திமுக நல்லாட்சி தரும் என்றெல்லாம் மக்கள் ஓட்டுப்போடவில்லை. கலைஞர், ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலினுக்கும் மக்கள் இடம்கொடுத்துவிட்டார்கள் என்று கருதக்கூடாது, அய்யோ பாவம் அவரும் ஆளட்டுமே என்கிற அனுதாப அலையில்தான் அவர் வென்றதாகச் சொல்கிறார்கள்.

திமுக ஆட்சி எப்படியிருக்கிறது?

ஆட்சியைக் குறை சொல்ல முடியாது. ஆனால், இந்து மதம், இந்து கோயில்கள் தொடர்பான விஷயங்களில் மட்டும் அதீத கவனம் செலுத்துகிறார்களே, ஏன்? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் கருவறை வரையில் செல்லலாம், தமிழில் அர்ச்சனை, கோயில் நிதியில் கரோனா நோயாளிகளுக்கு அன்னதானம் என்று சொல்லிக்கொண்டே போகிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களா? விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தடை போட்டதைக்கூட நான் விமர்சிக்க மாட்டேன். ஆனால், மற்ற மத வழிபாட்டுத்தலங்களில் கூட்டம் கூடவில்லையா? இந்துக் கோயில்களை மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பேன்; மற்ற மத வழிபாட்டுத் தலங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன் என்பது எந்த வகையில் நியாயம்? இந்து மக்களிடம் பக்தி உண்டு, வெறி கிடையாது. கடவுளை விமர்சித்தால்கூட பொறுமையாகப் போய்விடுவார்கள். இருந்தாலும் பொறுமைக்கு அளவுண்டு. நீங்கள் ஓட்டு வாங்குவதற்காக மத அரசியல் செய்திருக்கலாம். ஆட்சிக்கு வந்த பிறகாவது எல்லோருக்கும் பொதுவானவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்திருந்தால்கூட அறநிலையத் துறையின் நிலங்கள் இவ்வளவு வேகமாக மீட்கப்பட்டிருக்காது. கோயில் வருமானத்தில் பள்ளி, கல்லூரிகள் கட்டும் அறிவிப்புகள் எல்லாம் வந்திருக்காது என்றும் சொல்கிறார்களே?

அது வரவேற்கத்தக்கது. கோயில் இடங்களை யார் அபகரித்தாலும் சரி, அது அதிமுககாரர்களாக இருந்தாலும் சரி, திமுககாரர்களாக இருந்தாலும், கோயிலைச் சார்ந்தவர்களாகவே இருந்தாலும் சரி மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. கடந்த அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் மீட்க வேண்டும். அதேநேரத்தில், மீட்ட நிலத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் ஒவ்வொரு இந்துவும் கண்காணிக்க வேண்டும். கோயில் நிலம், வருமானத்தில் எந்தத் திட்டத்தை நிறைவேற்றினாலும், இந்து மக்களின் விருப்பத்தைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும்.

மாநில அரசுகூட பெட்ரோல் விலையைக் குறைக்க முயற்சி செய்கிறபோது, ஒவ்வொரு சாதாரணனையும் பாதிக்கும் பெட்ரோல், கியாஸ் விலையைக் குறைப்பதில் ஏன் மத்திய பாஜக அரசு விடாப்பிடியாக அரசியல் செய்கிறது?

நான் பாஜகவாக இருந்தாலும்கூட, இந்த விஷயத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. கியாஸ் என்பது முன்பெல்லாம் நடுத்தர, வசதியான மக்கள் பயன்படுத்தும் அம்சமாக இருந்தது. இன்று கிராமத்தில்கூட எல்லா வீடுகளிலும் கியாஸ் இணைப்பு இருக்கிறது. எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி நீயா, நானா என்று போட்டிபோடுவதை விட்டுவிட்டு, ஏழை எளிய மக்களை மனதில் வைத்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இதில் வீண் பிடிவாதமோ, ஈகோவோ கூடவே கூடாது. மக்கள்தான் நமக்கு இந்த ஆட்சி அதிகாரத்தைத் தந்திருக்கிறார்கள். பெட்ரோல் விஷயத்திலும் அப்படித்தான். இந்த விஷயங்களில் மத்திய அரசும் இறங்கி வர வேண்டும். மாநில அரசும் இறங்கி வர வேண்டும். எனக்கு வருமானம் குறையும், எனது வரிப்பங்கு குறையும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல், இரண்டு தரப்பும் சுமூகமாகப் பேசி முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் 4 பாஜக எம்எல்ஏ-க்கள் போயிருக்கிறார்கள். பேரவையில் அவர்களது செயல்பாடு எப்படியிருக்கிறது?

இன்னும் அவர்களுக்குச் சரியான வாய்ப்பு வரவில்லை. எனவே செயல்பாடு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. அதிமுகவின் வேகம்கூட பாஜகவிடம் இல்லை. நீட் தீர்மானம் போட்டபோது, அதை எதிர்த்ததுடன் நிற்காமல் அதுகுறித்து மக்கள் மன்றத்தில் தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்திருக்க வேண்டும். தகுதியானவர்களை அடையாளம் காண நீட் தேர்வு தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், வசதியானவர்கள் மட்டும்தான் நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்று சொல்லப்படுகிற குற்றச்சாட்டு உண்மை என்றால் அதைக் களையவும் முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழக ஆளுங்கட்சிக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீட் எதிர்ப்பு என்று வீம்பாகப் போராடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். தீர்மானம் மட்டுமே தீர்வாகிவிடாது. தமிழக சட்டமன்றத்தில் போடப்பட்ட எத்தனையோ தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாகவே இருக்கின்றன. நீட் ரத்து செய்யப்படும் வரையில் ஏழை மாணவர்களுக்கு என்ன செய்தீர்கள்? போராட்டத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நீட் தேர்வுக்குத் தயாராக முடியாத ஏழை மாணவர்களுக்கும் கொடுக்கலாம். கலைஞர் சமாதி... அது இது என்று எதற்கெல்லாமோ கோடிக்கணக்கில் செலவழிக்கிற தமிழக அரசுக்கு இது பெரிய செலவு அல்ல. கல்வியும், மருத்துவமும்தான் மக்களின் அத்தியாவசியத் தேவை. இந்த இரண்டோடும் தொடர்புடைய நீட் விஷயத்தை வெறும் அரசியலாக மட்டும் பார்க்கக் கூடாது.

ஒரு காலத்தில் மோடி அலை வீசிய வடமாநிலங்களில் கூட இப்போது மோடிக்கும், மத்திய அரசுக்கும் எதிரான விமர்சனங்களும், அதிருப்தியும் அதிகரித்திருக்கிறதே? மோடியின் செல்வாக்கு சரிகிறதா?

இந்தக் கரோனா காலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களைப் பரிதவிக்க விட்டுவிட்டார்கள் என்பது மாதிரியான குற்றச்சாட்டு வரத்தான் செய்யும். ஆனால், எந்தக் கட்சியாலும் இந்தக் காலகட்டத்தில் பாஜகவைவிடச் சிறப்பாக ஆட்சி செய்திருக்க முடியாது என்று அடித்துச் சொல்ல முடியும்.

இன்னொன்றையும் உறுதியாகச் சொல்வேன். வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்திருக்கிறது. வடமாநிலங்களில் வேண்டுமென்றால், 80 சதவீதமாக இருந்த மோடியின் செல்வாக்கு 70 சதவீதமாகக் குறைந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் 10, 15 சதவீதமாக இருந்த பாஜகவின் செல்வாக்கு இப்போது 20, 30 சதவீதமாக வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் என்றில்லை, முன்பு பாஜக செல்வாக்கில்லாமல் இருந்த பல மாநிலங்களில் பாஜகவுக்கு ஏறுமுகம்தான்.

தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவே ஆட்சியில் இருப்பதால் மக்களுக்குக் கொஞ்சம் அலுப்பு தட்டியிருக்கலாமே தவிர, அதற்காக மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாகவோ, காங்கிரஸைவிட பாஜகவின் ஆட்சி மோசமாகிவிட்டது என்றோ சொல்லிவிட முடியாது. பாஜகவுக்குக் காங்கிரஸே மேல் என்று இந்தியாவில் ஒரு ஆள்கூட சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஏனென்றால், காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரையில் தினந்தினம் தீவிரவாதத் தாக்குதல், மீனவர்கள் மீதான தாக்குதல் என்று அண்டை நாட்டினரின் தொந்தரவுக்கு ஆளான இந்தியா இப்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி என்றால் நாடே பரபரப்பாகின்ற, போலீஸாரைக் குவிக்கின்ற சூழல் எல்லாம் இப்போது இல்லவே இல்லை. எனக்குத் தெரிந்து இந்தியாவில் அதிகமான மதக் கலவரங்களும், சாதிக் கலவரங்களும் நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான்.

கரோனாவுக்குப் பிறகு திரைத் துறையின் முகமே மாறியிருக்கிறது. ஓடிடி-யில் பல படங்கள் வெளியாகின்றன. இனி தியேட்டர்களின் கதி என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?

ஓடிடி நிரந்தரமல்ல. இது ஒரு ஃபர்ஸ்ட் எய்டு மாதிரிதான். வட்டிக்குக் கடன் வாங்கி படம் எடுத்துவிட்டு அதை வெளியிட முடியாமல் தவிக்கிற தயாரிப்பாளர்கள், தியேட்டர் திறக்கும் வரையில் காத்துக்கொண்டிருக்க முடியாது. வட்டி ஏறிப்போகும். இப்போதைக்கு உயிர் பிழைக்க வேண்டும், படத்தை எப்படியாவது வெளியிட்டு போட்ட காசையாவது எடுத்து கடனைக் கட்டுவோம் என்பதற்காகத்தான் ஓடிடி-யில் படத்தை வெளியிடுகிறார்கள். மக்கள் ஓடிடி-யில் படம் பார்க்கிறார்கள்தான் என்றாலும், அவர்கள் முழுத் திருப்தியடையவில்லை. தியேட்டரில் போய் படம் பார்த்தால்தான் சினிமா பார்த்த திருப்தியே வரும். எனவே, மீண்டும் அந்தக் காலம் திரும்ப வரும். நானும் இரண்டு படங்களை எடுக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஜனவரியில் அறிவிப்பு வெளிவரும். பேரரசுவின் 2-வது அலையை விரைவில் எதிர்பாருங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in