தமிழக ஆளுநர் மீது அடுக்கடுக்கான புகார்களுடன் அதிரடி மனு: குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது

தமிழக ஆளுநர் மீது அடுக்கடுக்கான புகார்களுடன் அதிரடி மனு: குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக குடியரசு தலைவரிடம் பல்வேறு புகார்களுடன் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழத்தில் சட்ப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021-ல் ஆட்சி அமைத்தது. இதனையடுத்து ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அப்போது பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது.

அவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட போதே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அந்த மனுவில், " இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாகத் தெரிவிக்கிறது. எனினும், பெயரளவில் மட்டுமே மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். ஏனென்றால் ஆளுநர் மாநிலத்தில் அரசியலமைப்புக் கருவியின் ஓர் அச்சாணி ஆவார்.

அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை அவரது பெயரிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கையளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதும் மக்களாட்சிக்குச் சாவுமணி அடிப்பதுமான செயலாகும். .

மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவையின்றிக் காலந்தாழ்த்துகிறார் என்று குறிப்பிட வேதனையடைகிறோம். அரசியல் சட்டப்பிரிவு (200/201)-ன்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, பலமாத காலம் காலந்தாழ்த்தினார். இதன் பின்னர், ஆர்.என்.ரவி மேற்கூறப்பட்ட சட்ட வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் (ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதால்), குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைத் தானே கையில் எடுத்துக் கொண்டு, சட்டப்பேரவையின் முடிவை கேள்விக்குள்ளாக்கி, சட்ட வரைவைத் சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயலாகும்.

தாம் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில், அவர் ஆபத்தான, பிளவுபடுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளைப் பொதுவெளியில் பேசி வருகிறார். மக்கள் மனங்களில் வெறுப்பைத் தூண்டி, சமூகப் பதற்றத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுகள் அமைகின்றன.எனவே, தமிழக ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் அளித்துள்ள புகார்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in