
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. உணவுப் பொருட்கள், எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் ஸ்லோன் பெட்ரோல் நிறுவனம் இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் விலையை 55 ரூபாயும் உயர்த்தியுள்ளது. இதனால் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 254 ரூபாயாகவும், டீசல் 176 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலேயே, இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பதாக ஸ்லோன் பெட்ரோல் நிறுவன தலைவர் சுதீப் விக்ரமசிங்கே விளக்கமளித்திருக்கிறார்.
இலங்கையில் அந்நாட்டு நாணயமான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதனால் செல்போன் கட்டணங்கள் 30 சதவீதமும், விமான கட்டணங்கள் 27 சதவீதமும் உயரும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துவருவதால், ஏற்கெனவே பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்நாடு திணறிவருவது குறிப்பிடத்தக்கது.