எல்.முருகனின் கோரிக்கையை ஏற்று நகரும் படிக்கட்டுகள் அமைக்க முடிவு: மயிலாடுதுறை ரயில் பயணிகள் மகிழ்ச்சி

எல்.முருகனின் கோரிக்கையை ஏற்று  நகரும் படிக்கட்டுகள் அமைக்க முடிவு: மயிலாடுதுறை ரயில் பயணிகள் மகிழ்ச்சி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை ரயில்நிலையத்தில்  இரண்டு நகரும் மின்  படிக்கட்டுகள் அமைக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை ரயில் நிலையம் காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய ரயில் ஜங்ஷனாக திகழ்கிறது. இங்கிருந்து மைசூர், கோயம்புத்தூர், செங்கோட்டை, திருச்சி, விழுப்புரம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும்,  தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்களும் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் முக்கியமான பல ரயில்கள் நான்கு மற்றும் ஐந்தாவது பிளாட்பாரங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அதற்குப் படிக்கட்டுகள்  வழியாக மேலே நடை மேம்பாலத்தில்  ஏறிச்சென்று ரயிலைப் பிடிப்பதற்கு வயது முதிர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளும்,  கைக்குழந்தைகளுடன் வருபவர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  இதனால் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைத்துத்தர வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மக்களின் அன்றாட ரயில் பயணத்தை மேம்படுத்த மின் நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்ற  அப்பகுதி மக்களின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கொண்ட  மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன் இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு  வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்று மயிலாடுதுறை ரயில் நிலையத்தில்  இரண்டு  மின் நகரும் படிக்கட்டுகள் அமைக்க அனுமதி அளித்து நேற்று  உத்தரவிடப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை ரயில் பயணிகள் சார்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கும், எல். முருகன் சார்பில் ரயில்வே துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in