காப்புக்காடுகளை கபளீகரம் செய்யவரும் கனிமச் சுரங்கங்கள்!

அரசின் முடிவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு
காப்புக்காடுகளை கபளீகரம் செய்யவரும் கனிமச் சுரங்கங்கள்!

காப்புக் காடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் குவாரிகள் மற்றும் தொழில்சார்ந்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று இருந்த தடையை தமிழக அரசு நீக்கி இருப்பது பெரும் சர்ச்சையாகி வருகிறது’

அரசின் இந்த முடிவுக்கு தமிழக எதிர்க்கட்சிகள், சூழலியல் அமைப்புகள் மட்டுமின்றி திமுகவின் கூட்டணி கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்த தடைநீக்க உத்தரவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சூழலியல் செயல்பாட்டாளர்களும் பதறுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்  துறையிலிருந்து கடந்த டிசம்பர் 12-ம் தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை மூலம் தமிழ்நாடு சிறு கனிம சலுகை சட்ட விதிகள் 1959 பிரிவு 36 உட்பிரிவு 1ஏ -யில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்படி, காப்புக் காடுகளில் (reserve forest) இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எவ்வித அகழ்வு மற்றும் சுரங்கத்தொழில் நடைபெறக்கூடாது என்கிற தடை தளர்த்தப்பட்டிருக்கிறது.

காப்புக்காடுகளுக்கு மட்டுமே விதி தளர்த்தப்பட்டிருப்பதாகவும் வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் (elephant corridor) ஆகியவற்றில் ஒரு கிலோமீட்டர் வரை சுரங்கப் பணிகளுக்கு உள்ள தடை தொடரும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பெரும்பாலும் காப்புக் காடுகளே உள்ளன. அவற்றை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது. எனவே, இந்த தடைநீக்கத்தால் மனித – விலங்கு மோதல்கள் அதிகமாகும் என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த அரசாணைக்கு எதிராக மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் சூழலியல் அமைப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளன. அதில், ‘தமிழக அரசால் கடந்த 3.11.2021 அன்று (அரசாணை எண் 295) காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை கனிமச் சுரங்கங்களுக்குத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. காடுகள் மற்றும் காட்டுயிர்கள் பாதுகாப்பிற்கு இந்த தடை மிகவும் பேருதவியாக இருந்தது. இந்த நிலையில், குவாரி நிறுவனங்களின் நலனையும் அரசின் வருவாயையும் கணக்கில் கொண்டு காப்புக்காடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை பிறப்பிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்திய வன மதிப்பாய்வகத்தின் தரவுகளின்படி தமிழகத்தில் 20.31 சதவீத நிலப்பரப்பு மட்டுமே காட்டுப்பகுதியாக உள்ளது. அதில், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே தேசியப் பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகள் வலசைப்பாதைகள் ஆகியவை உள்ளன. இந்தத் தடை ஆணை தளர்த்தப்பட்டதால் மீதமுள்ள காப்புக்காடுகள் அனைத்துக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக, இந்தத் தடை ஆணை வழங்கப்பட்ட பின்னர் மட்டும் காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் அமைக்கத் திட்டமிடப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்ட 32 குவாரிகளின் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நிராகரித்திருந்தது. இதனால் 500-க்கும் மேற்பட்ட குவாரிகள், சுரங்கங்கள் ‘டாமின்’ நிறுவனத்தின் பெருமளவிலான குவாரி, சுரங்கங்கள் உள்பட பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக, குவாரி மற்றும் சுரங்க உரிமையாளர்களின் நலனைக் காக்க, அரசின் வருவாயைப் பெருக்க ஏதுவாக இந்த விதியில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் அனுமதி மறுக்கப்பட்ட குவாரிகளும் ஏற்கனெவே ஒரு கி.மீ சுற்றளவுக்கு செயல்பட்டுவந்த காரணத்தால் மூடப்பட்டிருந்த குவாரிகளும், சுரங்கங்களும், செங்கல் சூளைகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் காட்டுயிர்கள் பாதிப்புக்குள்ளாகும்.

கோவை அருகே தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக, காடுகளையொட்டி தோண்டப்பட்ட பெருங்குழிகளால் யானைகளின் வலசை பாதிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில்கொண்டு அங்கு சுரங்கப் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதை நாம் அறிவோம். தற்போது எல்லா இடங்களிலும் சுரங்கப் பணிகளுக்கு அனுமதித்திருப்பது வேதனைக்குரிய செய்தி. இந்தத் தடைநீக்கத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து காடுகளையொட்டியுள்ள மலைகளைச் சிதைத்து, கற்களும் மண்ணும் அண்டை மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்படும் அவலம் இனி சட்டரீதியாகவே தொடரும் என்பது வேதனையளிக்கிறது.

உச்ச நீதிமன்றம் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்புகளின் நோக்கங்களுக்கு எதிராக உள்ள இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்’ என அந்தக் கட்சிகள் கோரியுள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் கடிதத்திற்குப் பின்னர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் பொருள், சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் ஆகும்; அவை காப்புக் காடுகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை & காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் 09.02.2011 நாளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்கு மட்டுமே இடைவெளி தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காப்புக் காடுகள் பற்றி குறிப்பிடவில்லை. எனவே, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959-ல் அரசு ஆணை நாள். 14.12.2022-ன் வாயிலாக காப்புக் காடுகள் என்ற சொல் நீக்கப்பட்டது சரியே. 1959 முதல் 03.11.2021 நாளிட்ட விதி திருத்தத்திற்கு முன்பு இருந்த காப்புக் காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளியே தற்போதும் பின்பற்றப்படுகின்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

துரைமுருகன்
துரைமுருகன்

எனவே, 14.12.2022 நாளிட்ட விதித்திருத்தத்தின் மூலம், காப்புக் காடுகளுக்கு அருகிலுள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் புதியதாகக் கனிமம் வெட்டியெடுப்பதற்காக குவாரி மற்றும் சுரங்கக் குத்தகை உரிமம் வழங்கும் போது, காப்புக்காடுகளின் எல்லைகளில் இருந்து 60 மீ. சுற்றளவிற்குள் எந்தவித குவாரிப்பணி அல்லது சுரங்கப்பணி மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் சுரங்கம், குவாரிக் குத்தகை உரிமம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த குவாரிகளும் செயல்படலாம்’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், “தமிழ்நாடு சுரங்க அனுமதி விதிமுறைகளின்படி, குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதில் 36-வது பிரிவில்தான் எந்தெந்த பகுதிகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சட்டத்திருத்தம் 2021 நவம்பரில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வரலாற்று மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் குவாரிகள் அமைக்கக்கூடாது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சரணாலயங்கள், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக்காடுகளிலிருந்து 1 கி.மீ சுற்றளவில் குவாரிகள் அமைக்கக்கூடாது என்று தடை கொண்டுவரப்பட்டது.

உச்சநீதிமன்றம் சில தீர்ப்புகளில் காடுகளில் இருந்து அருகாமை பகுதிகளை சூழலியல் உணர்திறன் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பாதுகாக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளது. எங்களைப் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, சூழலியல் செயல்பாட்டுக்கான முக்கியமான முன்னெடுப்பாக இருந்தது. ஆனால், இப்போது மற்றொரு சட்டத்திருத்தம் மூலமாக மேற்கூறிய தடைக்குரிய இடங்களில் இருந்து காப்புக்காடுகளை நீக்கியுள்ளனர்.

வெற்றிச்செல்வன்
வெற்றிச்செல்வன்

குவாரிகளின் நலன் கருதியும், அரசிற்கு வருவாய் வேண்டும் என்ற அடிப்படையிலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், சுரங்கத்துறை அதிகாரிகளின் பரிந்துரையின்படியும் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த தடைநீக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றோ அல்லது இந்தத் தடையால் எத்தகைய இழப்பு ஏற்பட்டது என்றோ எத்தகைய ஆய்வுகளையுமே அரசு செய்யவில்லை.

ஆய்வுகளோ அல்லது புள்ளிவிவரங்களோ இல்லாமல் சட்டத்திருத்தம் மேற்கொண்டதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்தவுடன், அரசின் சார்பில் வெளியான விளக்கத்தில், 2021-ல் இந்தத் தடைசட்டம் வந்த பின்னர் சுமார் 500 குவாரிகள் நிறுத்தபட்டுள்ளன. அதனைக் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சொல்கிறார்கள்.

அப்படியானால் வனத்தையொட்டிய ஒரு கி.மீ பகுதியில் இத்தனை காலம் இவ்வளவு குவாரிகள் செயல்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தனை குவாரிகளும் மீண்டும் செயல்பட்டால், வனச்சூழல் பாதிக்கப்படும், மனித – விலங்குகள் மோதல் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் யானைகள் பெரும்பாலும் காப்புக்காடுகளில் தான் வசிக்கின்றன. இன்னும் யானை வழித்தடங்கள் எவையெவை என இறுதிசெய்யப்படவில்லை, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் இத்தகைய தடைநீக்கம் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

பொதுவாக, நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பு இருக்கவேண்டும். ஆனால், தமிழகத்தில் சுமார் 24 சதவீதம் மட்டுமே வனப்பகுதி உள்ளது. இதற்காக வனப்பரப்பை அதிகரிப்பதற்காக ஒருபக்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, மறுபக்கம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. வனப்பகுதி என குறிப்பிடப்பட்ட அனைத்துப் பகுதிகளுமே காப்புக்காடுகள் தான். அதுபோல வனவிலங்கு சரணாலயங்கள் அனைத்துமே காப்புக்காடுகளை ஒட்டியே அமைத்திருக்கும்.

எனவே, காப்புக்காடுகளில் பாதிப்பு ஏற்பட்டால் அது வனவிலங்கு சரணாலயங்கள், உயிரியல் பூங்காக்களையும் பாதிக்கும். தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இதுகுறித்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளோம்” என்றார்.

உலகம் முழுவதுமே வனப்பரப்பை அதிகப்படுத்தவும், வனவிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்கவும் பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும், பல இடங்களில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் குறித்து பேசி வருகிறார். அப்படியிருக்கையில் தமிழக அரசின் காப்புக்காடுகள் குறித்த இந்த அரசாணையானது அத்தனைக்கும் முரணாகவே இருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in