முதல்வர் மனதில் நிரந்த இடம்: எதிரணிக்கு கிலியூட்டிய சுரேஷ்ராஜன்!

முதல்வரிடம் ஆசிபெறும் சுரேஷ்ராஜன் குடும்பம்
முதல்வரிடம் ஆசிபெறும் சுரேஷ்ராஜன் குடும்பம்

கன்னியாகுமரி மாவட்ட திமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், தன் குடும்பத்தோடு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். இது கன்னியாகுமரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் கவனம் குவித்துள்ளது.

சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்தவர் சுரேஷ்ராஜன். 33 வயதிலேயே சுற்றுலாத் துறை அமைச்சரானவர். அவர் அமைச்சராக இருந்தபோது தோவாளையில் மலரியல் ஆராய்ச்சி மையம், புத்தேரி மேம்பாலம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களைக் கொண்டுவந்தார். திமுகவில் மிகத் தீவிரமாக செயல்பட்டதாலேயே அதிமுக ஆட்சியில் சொத்துக்குவிப்பு வழக்கையும் சந்தித்தார். இதில் அவரது பெற்றோர்கள் பெயரும் சேர்க்கப்பட்டது. அவர்களும் கடைசிக்காலம் வரை இந்த வழக்குகளுடனேயே வாழ்ந்தனர். திமுகவில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையேயான மோதல் உருவெடுத்த காலத்தில் மு.க.ஸ்டாலினின் பக்கம் நின்றவர் சுரேஷ்ராஜன்.

20 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ்ராஜன், அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் தன் பதவியை இழந்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக, பாஜக இடையே மேயர் தேர்தலில் இழுபறி நிலைக்குச் சென்றதால் மேயர் தேர்தல் முடிவு வந்த அன்றே அவர் வசம் இருந்த கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிபோயிற்று. ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகரச் செயலாளர் மகேஷ் ஆகியோருக்கும் சுரேஷ்ராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். சுரேஷ்ராஜனின் பதவிப்பறிப்பைப் பயன்படுத்தி, அவர்களும் ஓரணியாக வலுப்பெற்றனர்.

திருமண விழாவில்...
திருமண விழாவில்...

இந்நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ்ராஜனின் மகன் தமிழின் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. இந்தத் திருமணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, முதல்வரின் சகோதரி செல்வி என முதல்வர் வீட்டுப் பெண்களே வந்தனர். அதிலும் சம்பிரதாயமாக வந்துசெல்லாமல் முந்தைய நாள் வரவேற்பு, மறுநாள் திருமணம் இரண்டையுமே தானே முன்னின்று நடத்தினார் துர்கா ஸ்டாலின். அப்போதே கட்சிக்குள் சுரேஷ்ராஜனின் கரம் மீண்டும் ஓங்கும் என எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் சுரேஷ்ராஜனின் பெயரையே தேடிக்கண்டிபிடிக்கும் அளவுக்கு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பெயரைப் போட்டு நோட்டீஸ் அடித்தது எதிர்முகாம். அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தார் சுரேஷ்ராஜன்.

கட்சியின் தொண்டர்களுக்கோ புதிய கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மகேஷ் பின்னால் செல்வதா, முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் பின்னால் செல்வதா என குழம்பிப் போகும் அளவுக்கு இருவரும் களத்தில் வேகமாக நிற்கின்றனர். இப்படியான சூழலில் இன்று காலையில் சுரேஷ்ராஜன் குடும்பத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் குடும்பத்தோடு ஆசிபெற்றுள்ளனர். திருமணத்திற்கு நேரில் வர இயலாத முதல்வர், இன்று தமிழ் - சஞ்சனா தம்பதியை ஆசீர்வதித்தார்.

சுரேஷ்ராஜனின் அலைபேசிக்கு அழைத்தால், ‘தமிழே அமுதே வணக்கம்....தாய் பிள்ளை உறவம்மா உனக்கும்...எனக்கும்’ என்பதுதான் நெடுநாள் காலர் டியூன். அதுபோலவே கட்சிப் பொறுப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுகவுக்கும், சுரேஷ்ராஜனுக்கும் தாய் - பிள்ளை உறவுதான். அது முதல்வருக்கும் தெரிந்ததாலேயே இந்த முக்கியத்துவம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். குமரி மாவட்ட திமுகவில் முதல்வருடனான சுரேஷ்ராஜனின் சந்திப்பு முக்கியத்துவம் கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in