பெரியாறு அணை: ஓபிஎஸ், துரைமுருகன் - யார் சொல்வது உண்மை?

இன்றைய அரசாவது மக்களிடம் வெளிப்படையாக நடந்துகொள்ளுமா?
பெரியாறு அணை: ஓபிஎஸ், துரைமுருகன் - யார் சொல்வது உண்மை?

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில், மாநில உரிமையை விட்டுக்கொடுத்தது யார்? என்பது தொடர்பாக இன்றைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே அறிக்கைப் போர் மூண்டிருக்கிறது. இருவரும் தேர்ந்த வழக்கறிஞர்களைப் போல, தங்கள் தரப்பு வாதங்களை மக்கள் முன்னிலையில் வைத்திருக்கிறார்கள். அதில், யார் சொல்வது உண்மை என்பதை ஆராயும்முன், இந்தப் பிரச்சினையின் பின்னணியை ஓரிரு வரிகளில் பார்த்துவிடலாம்.

அணை பிரச்சினை

முல்லை பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. நீர் தேக்கும் அளவு 152 அடியாக இருந்தது. அணை பலவீனமாக உள்ளதென்று கேரளா பரப்பிய வதந்தியைத் தொடர்ந்து, தண்ணீர் தேக்கும் அளவு 136 அடியாகக் குறைக்கப்பட்டது. அணை பலமாகத்தான் இருக்கிறது என்று நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. போராடிப்பெற்ற உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, அந்நாட்களில் சரியாக மழை பெய்யாவிடிலும்கூட, பொறுமையாகக் காத்திருந்து அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தினார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா. தற்போது முல்லை பெரியாறு பகுதியில் நல்லமழை பெய்துவருவதால், இந்த ஆண்டு தண்ணீர் தேக்கப்படும் என்று 6 மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மற்றும் அம்மாநில முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, 137 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்காவண்ணம் அணைக்கு வருகிற தண்ணீரில் பெரும்பகுதி, உபரிநீராக கேரளாவுக்குத் திறக்கப்பட்டது. அதுவும் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கும்போது, கேரள அமைச்சரும் அதிகாரிகளும் தாங்களாகவே தண்ணீரைத் திறந்துவிட்டதாகச் சொன்னதால் சர்ச்சையானது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. கூடவே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நவ.9 (நாளை) 6 மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதேபோல பாஜக, பாமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் தமிழக அரசு, மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டதாகக் கண்டித்தன.

அறிக்கைப் போர்

இந்தச் சூழலில், கடந்த 5-ம் தேதி தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 3 அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். பின்பு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் திறப்பு குறித்து விளக்கமளித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் போராட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “முல்லை பெரியாறு அணை குறித்துப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தார்மீக உரிமை கிடையாது. 2 பேரும் மாறிமாறி பொதுப்பணித் துறை அமைச்சர்களாக இருந்தனர். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அவர்களில் ஒருவராவது பெரியாறு அணையை நேரில் வந்து பார்வையிட்டுள்ளனரா? நான், இந்த 80 வயதில் தட்டுத்தடுமாறியாவது வந்து ஆய்வு செய்துள்ளேன். பழனிசாமியாவது சேலத்துக்காரர். பன்னீர்செல்வம் தேனிக்காரர்தானே? இவராவது ஆய்வு செய்திருக்கலாமே? அப்போது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, இப்போது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறுவதைப் பார்த்து நாடே சிரிக்கிறது” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுப்பதற்காக கடந்த 6-ம் தேதி ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘முல்லை பெரியாறு அணையை நான் ஆய்வு செய்ததில்லை, பார்வையிடவில்லை என்ற அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த 10 ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையிலும், மாவட்ட அமைச்சர் என்ற முறையிலும் 14 முறை நான் முல்லை பெரியாறு அணைப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையே முல்லை பெரியாறு அணையுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்’ என்பது அதன் சாரம்.

ஓபிஎஸ்சின் முழுப்பொய்

மறுநாளே இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்டார் துரைமுருகன். அதில், ‘முல்லை பெரியாறு அணைக்கு 14 தடவை சென்றேன் என்கிறாரே ஓபிஎஸ், அது எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா? அவர் தேதிகளை குறித்துவைக்காவிட்டாலும் பொதுப்பணித் துறை இலாகாவில் குறித்து வைத்திருப்பார்கள். யார் யார் வந்தார்கள், என்னென்ன நடந்தது, என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று. இது அந்தத் துறையின் நெடுநாளைய வழக்கம். ஆனால், பெரியாறு அணைக்குச் சென்றுவந்ததற்கு ஆதாரமாக ஓபிஎஸ் குறிப்பிடுவது நான் ஒருமுறை தண்ணீரைத் திறந்துவைத்து பூத்தூவினேன் என்று. எல்லா அணைகளிலும் தண்ணீரை மேலிருந்துதான் திறந்துவைப்பார்கள். ஆனால், முல்லை பெரியாறு அணையில் மட்டும் விசித்திரம், அந்த அணையின் பின்புறம் குழாய் வழியாக நம் பகுதியில் இருந்தே திறந்துவிட முடியும். ஆக, ஓபிஎஸ் அணைத் தண்ணீரைத் தொட்டுவிட்டு வந்திருக்கிறாரே ஒழிய, அணையைக் கண்டுவரவில்லை‘ என்று போட்டுத் தாக்கினார் துரைமுருகன்.

தேனி மாவட்ட மூத்த பத்திரிகையாளர்களும், ஓபிஎஸின் அறிக்கை பொய்யானது என்றே சொன்னார்கள். “தேனியில் இருந்து வாகனம் மூலம் சென்று, தேக்கடியில் இருந்துதான் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியும். அங்கிருந்து படகில் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்தான், மறுமுனையில் உள்ள கேரள ஷட்டருக்குப் போகவே முடியும். அங்கேதான் அணையே இருக்கிறது. ஆனால், இங்கிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டுவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் அணையை 14 முறை ஆய்வுசெய்தேன் என்று ஓபிஎஸ் சொல்வது பொய். அப்படி அவர் போனதுமில்லை, போயிருந்தால் எங்களுக்குத் தகவல் சொல்லாமலா போயிருப்பார்?” என்றனர்.

இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, பெரியாறு அணையில், தான் ஆய்வு செய்கிற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் பன்னீர்செல்வம். அதில், அணையை நான் ஆய்வு செய்த படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் அன்றைய தேனி மாவட்ட அதிமுக செயலாளரும், இன்று திமுகவில் இருப்பவருமான தங்க தமிழ்செல்வனும் என் அருகில் இருக்கிறார். அவரிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தங்க தமிழ்செல்வன் தரப்பில் கேட்டபோது, ‘அந்தப் படம் எடுக்கப்பட்டது 2006-க்கு முன்பு. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட படம் கிடையாது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக அன்றைய முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் குழுவினருடன் ஓபிஎஸ்சும், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோரும் சென்றிருந்தபோது எடுத்த படம். பொய்யான அறிக்கைவிட்டு வசமாக மாட்டிக்கொண்டார் பன்னீர்செல்வம்’ என்றனர்.

கில்லாடித்தனத்தை அணை உரிமையில் காட்டுங்கள் துரைமுருகன்...

இந்தப் பிரச்சினையை எப்படியாவது திசைதிருப்பிவிடலாமா என்று காத்துக்கொண்டிருந்த துரைமுருகனுக்கு, லட்டு மாதிரி வந்து சிக்கியிருக்கிறது பன்னீசெல்வத்தின் பொய் அறிக்கை. ‘அரசியலில் நீங்க படிச்ச ஸ்கூலுக்கு, நான் ஹெட்மாஸ்டர் தம்பி’ என்று நிரூபித்திருக்கிறார் துரைமுருகன். எல்லாம் சரி, இதனால் 6 மாவட்ட மக்களுக்கு என்ன பயன்?

ஓபிஎஸ் தன்னுடைய முதல் அறிக்கையில் கேட்ட சில கேள்விகளுக்கு, வேண்டுமென்றே பதில் சொல்லாமல் தவிர்த்திருந்தார் துரைமுருகன். அதைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட 2-வது அறிக்கையிலும், திரும்பவும் அதற்குப் பதில் கேட்டிருந்தார் ஓபிஎஸ். அதாவது, முல்லை பெரியாறு அணை குறித்து தற்போதைய கேள்விகள், முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில், கேரளாவுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடனா என்பதும், கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கை என்றால் அங்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எப்படி கலந்துகொண்டார்கள் என்பதும், தமிழ்நாடு அரசின் ஒப்புதலுடன் என்றால் இதுகுறித்து விவசாயிகளிடமும் பிற கட்சிகளிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்பதும், அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பு கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதும்தான். தமிழ்நாட்டின் உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதா என்ற விவசாயிகளின் சந்தேகத்தைப் போக்கவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. இல்லை என்றால், அதற்குரிய விளைவுகளை திமுக சந்திக்கும் என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ஓபிஎஸ்.

தண்ணீரைத் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்குக் காரணம், நீதிமன்ற உத்தரவும், மத்திய அரசின் புதிய விதியும்தான் என்கிற நியாயமான காரணத்தைக்கூட, இந்தப் பிரச்சினை சர்ச்சையாகும் வரையில் வெளியே சொல்லவில்லை அமைச்சர் துரைமுருகன். மற்ற கேள்விகளுக்கு இன்னமும் பதிலும் சொல்லவில்லை. அணைக்குச் சொந்தக்காரர் துரைமுருகனோ, முதல்வர் மு.க.ஸ்டாலினோ அல்ல. 6 மாவட்ட விவசாயிகளும், தமிழக மக்களும்தான். அவர்களிடம்கூட வெளிப்படையாக நடந்துகொள்ள முடியாதா இந்த அரசால்? நடந்த பிரச்சினைக்கு வருத்தம் தெரிவிப்பதும், இனி அப்படி நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்வதும்தான் நல்ல அமைச்சருக்கு அழகு. செய்வாரா துரைமுருகன்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in