பேரறிவாளன் விடுதலையில் ஆளுக்கொரு கருத்து- தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நடப்பது என்ன?

பேரறிவாளன் விடுதலையில் ஆளுக்கொரு கருத்து- தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நடப்பது என்ன?

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பி வருகிறார்கள். தலைமை ஒரு கருத்தும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாறுபட்ட கருத்தையும் வெளியிட்டு வருவது காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அதிரடியாகக் கூறியது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தமிழக காங்கிரஸ் கட்சியில் மட்டும், பல்வேறு மாறுபட்ட கருத்துகளைக் காங்கிரஸ் பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்து வருகிறார்கள். “எனது தந்தையைக் கொலை செய்தவர்களை நானும், என் தங்கை பிரியங்காவும் முழுமையாக மன்னித்துவிட்டோம்” எனக் கடந்த 2018-ம் ஆண்டு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சித் தலைமையின் நிலைப்பாடு இப்படி இருக்க, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு வேறொரு மாதிரியாக இருக்கிறது.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற 7 பேரையும் உச்ச நீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று சொல்லித் தீர்ப்பு கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி அவர்களை விடுதலை செய்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலையாளிகள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்“ என தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் வெள்ளை துணியை வாயில் கட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தக் கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன், "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பண நாயகத்துக்கு பயங்கரவாதத்துக்குக் கிடைத்த வெற்றி" என்று கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறுகையில், “31 ஆண்டுக்கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இந்த விடுதலை குறித்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மகிழ்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட அந்த ஏழு பேரும், தண்டனை காலத்தைத் தாண்டி சிறையிலிருந்து விட்டார்கள். அதற்காக சட்டப்படி விடுதலை செய்யலாம். ஆனால் அவர்களை ஹீரோக்களாக்க கூடாது“ எனக் கூறியுள்ளார்.

இப்படி ஆளுக்கொரு கருத்தை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பி வருவது தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in