நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று!- ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து

நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று!- ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து

"தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் அரசியல் பயணத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மேலும் ஊக்கமாக அமையும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்தான் அடிப்படைக் காரணம் ஆகும். ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாத காலத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காட்டை நிறைவேற்றிக் காட்டி திமுக அரசு சாதனை படைத்து இருக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சிக் கோட்பாடு நிலை பெறவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் தமிழக மக்கள் அளித்துள்ள பேராதரவு பறைசாற்றப்பட்டு இருக்கிறது. வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி. தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் அரசியல் பயணத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மேலும் ஊக்கமாக அமையும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி உள்ள திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in