'மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறிக்கக்கூடாது'

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்
'மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறிக்கக்கூடாது'

"உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடாது" என மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

மக்களவையில் நடைபெற்ற துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், "தரவுகளை நீங்கள் நீண்ட நேரம் சித்ரவதை செய்தால், அது எதையும் ஒப்புக் கொள்ளும்’, என்று நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ரோனால்டு எச்.கோஷ் கூறியுள்ளார். இதை நான் சொல்ல காரணம், மத்திய அரசு வழங்கும் தரவுகளுக்கும், மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. 2022-ம் ஆண்டின் ஐ.நா.வின் வருடாந்திர மகிழ்ச்சிக்குறியீட்டுக்காக ஆய்வு நடத்தப்பட்ட 149 நாடுகளில் இந்தியா 136-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சமூக நீதியோடு பின்னிப்பிணைந்த சமூக நலனை அரசு அணுகாததையே இது உணர்த்துகிறது. தமிழகம், நாட்டின் ஐந்தாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் மாநிலம் ஆகும். இங்கு 608 மீனவக் கிராமங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. அங்குள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் டன் மீன்களை பிடிக்கிறார்கள். நீர்வழி மேம்பாட்டில் பெறுநிறுவனங்களின் வளர்ச்சிக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தும்போது அவற்றை கைவிட வேண்டும். உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடாது.

330 ஏக்கரில் இருந்து 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்படும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் புலிகாட்டில் உள்ள இயற்கை வளங்களுக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் குறிப்பாக பெண்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். 2016-ம் ஆண்டு இனயத்தில் பெரிய துறைமுகம் கொண்டு வர முயற்சி நடந்தது. அதனை மீனவர்களும், உள்ளூர் பொதுமக்களும் கடுமையாக எதிர்த்தனர். போராட்டம் நடத்தினர். கடற்கரையில் சர்வதேச சரக்குப்பெட்டக முனையம் அமைக்கப்பட்டால் கடல் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். 500 ஏக்கர் பரப்பில் துறைமுகம் அமைப்பதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடற்கரை மாயமாகி, மீனவர்கள் மீன்பிடித்தல் மற்றும் பிற பணிகளை மேற்கொள்ள இடமில்லாமல் போகும். ஒரு ஆண்டுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய துறைமுகங்கள் வரைவு மசோதாவுக்கு தமிழகம் தனது கருத்து வேறுபாட்டை பதிவு செய்தது. ஏனென்றால், அந்த மசோதா மாநிலங்களின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால், மத்திய அரசின் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். தற்போதுள்ள இந்திய துறைமுகச் சட்டம்-1908, சிறு துறைமுகங்களை திட்டமிடுதல், மேம்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திடமே இருக்க வழிவகை செய்கின்றன.

சாகர்மாலா திட்டத்தைப் பொறுத்தவரை, அமைச்சகம் மொத்தம் ரூ.690 கோடிக்கு மதிப்பிட்டது. இதில் ரூ.412.79 கோடியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த தொகை சாகர்மாலாவுக்கு மட்டும் இல்லை. ரூ. 52.789 கோடி, அந்தமான் லட்சத்தீவு துறைமுகம் போன்ற சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. சாகர்மாலாவுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் ரூ.360 கோடி மட்டுமே. இது அதன் திட்டமிடப்பட்ட தேவையில் 52.17 சதவீதம் குறைவு ஆகும். இந்த குறைப்பு, நாட்டின் கடல்சார் துறையின் வளர்ச்சி வேகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

இது அரசின் உண்மையான நோக்கமின்மையைத்தான் காட்டுகிறது. 44 சாகர்மாலா திட்டங்களில், 31 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.190 கோடியை கோரியபோது எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. சி.டி பர்ன்ஸ் கூறியதைப்போல உதவிக்கும் உரிமைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. எனவே மத்திய அரசு ஒரு சீரான பாதையில் செல்ல வேண்டும். தயவு என்று பார்க்காமல் மக்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.