'அதிமுகவை மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்' - செல்வப்பெருந்தகை காட்டம்

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துக் கேட்டிருந்த நிலையில், அதிமுக தனது பதிலை அனுப்பி உள்ளதாகவும் அதில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியன.

இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிமுக மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வ பெருந்தகை தனது கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

’கடந்த 2018 ஆம் ஆண்டில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை தேசிய சட்ட ஆணையம் கேட்டிருந்தது.

தமிழ்நாட்டில் அப்போது ஆளும் அ.தி.மு.க. அரசு ஜுன் 29, 2018 அன்று தேசிய சட்ட ஆணையத்திற்கு 'தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் 2021-ம் ஆண்டு வரை இருக்கிறது. இந்த சூழ்நிலையில், 'ஒரேதேசம், ஒரேதேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படும்.

எனவே, 'ஒரேதேசம், ஒரேதேர்தல்' திட்டத்திற்கு அதிமுகவின் ஆதரவு இல்லை' என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் இந்த திட்டத்திற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்திருந்தது. அப்போதைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி சிவா, இந்தியாவில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றார். மேலும், அனைத்து மதச்சார்ப்பற்ற கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.

ஆனால் இன்று அதிமுக வின் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிப்பது எந்த வகையில் நியாயம்? இவர்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்று தங்களை நிரூபித்துள்ளார்கள்.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு. ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சா? எப்படியாவது ஆட்சி, அதிகாரத்தில் வந்துவிட மாட்டோமா என்ற நப்பாசையில் இருக்கும் அதிமுகவினரை தமிழ்நாட்டு மக்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அவர்களின் எண்ணமும் ஈடேறாது. அரசியல் அமைப்பு சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்கிறது.

ஆனால், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த திட்டத்திற்குத் துணைபோகிறவர்களை மக்கள் ஒருகாலும் மன்னிக்கமாட்டார்கள்’ என செல்வ பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in