‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் ஓடி ஒளிந்தவர்கள் இந்துத்வா பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்!’

பாஜகவை உலுக்கியெடுக்கும் உத்தவ் தாக்கரே
‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் ஓடி ஒளிந்தவர்கள் இந்துத்வா பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்!’

இந்துத்வா கொள்கையை சிவசேனா கைவிடுவதாக பாஜக முன்வைக்கும் விமர்சனத்துக்குப் பதிலளித்திருக்கும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியினரைச் சகட்டுமேனிக்கும் விமர்சித்திருக்கிறார்.

அனுமன் சாலிஸா, அசான், ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், முன்னாள் கூட்டாளிகளான பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்திருக்கிறது.

உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் சாலிஸா பாடப் போவதாக அறிவித்த சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா, அவரது மனைவியும் சுயேச்சை எம்.பி-யுமான நவ்னீத் ராணா ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அவர் புறக்கணித்துவிட்டார்.

ராணா தம்பதியினர் மீதான போலீஸ் நடவடிக்கை ஹிட்லர் பாணியிலானது என்று விமர்சித்திருக்கும் அவர், “இதெல்லாம் முதல்வரின் உத்தரவுப்படிதான் நடக்கிறது. அனுமன் சாலிஸா மகாரஷ்டிரத்தில் பாடப்படாமல் பாகிஸ்தானிலா உச்சரிக்கப்படும்? அனுமன் சாலிஸாவை உச்சரிப்பது தேசத்துரோகம் என்றால், அந்த தேசத்துரோகத்தில் அனைவரும் ஈடுபடுவோம். அரசுக்குத் துணிவு இருந்தால் எங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யட்டும்” என்றும் சவால் விடுத்திருக்கிறார்.

பாஜகவைப் போலவே இந்துத்வக் கொள்கை கொண்ட கட்சியான சிவசேனா, 30 ஆண்டுகளாக பாஜகவுடனான கூட்டணியில் இருந்தது. 2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணியை முறித்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது. பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் சிவசேனா கட்சியை விமர்சித்துவரும் பாஜக, இந்துத்வா கொள்கையை அக்கட்சி கைவிட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டிவருகிறது.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசியிருக்கும் உத்தவ் தாக்கரே, “கடந்த சில நாட்களாக, இந்துத்வா கொள்கையை சிவசேனா கைவிட்டுவிட்டதாக பாஜக முழங்கிவருகிறது. நாங்கள் எதை விட்டுவிட்டோம்? வேண்டுமென்றால் அணிந்துகொள்ளவும் வேண்டாமென்றால் அகற்றவும் இந்துத்வா என்ன வேட்டியா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், “இந்துத்வா குறித்து எங்களுக்குப் பாடம் நடத்துபவர்கள், இந்துத்வாவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளட்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், நீங்கள் ஓடி ஒளிந்துகொண்டீர்கள். ராமர் கோயில் கட்டும் முடிவை எடுத்தது உச்ச நீதிமன்றம்தானே தவிர உங்கள் அரசு அல்ல” என்று கூறியிருக்கும் உத்தவ் தாக்கரே, இந்துக்கள் கோயில்களில் மணி அடித்துக்கொண்டிருப்பதை விரும்பாதவர் தனது தந்தை பால் தாக்கரே என்றும், இந்துக்கள் தீவிரவாதிகளை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் அவர் சிவசேனா கட்சியினருக்குக் கற்பித்திருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“அனுமன் சாலிஸாவைப் பாட விரும்பினால் அதைச் செய்துகொள்ளுங்கள். ஆனால், தாதாகிரி (ரவுடித்தனம்) செய்தால் அதை எப்படி முறியடிப்பது என எங்களுக்குத் தெரியும். சிவசேனாவுக்குச் சவால் விட்டால் பீமனின் விஸ்வரூபத்தையும், மகாருத்ர அவதாரத்தையும் காட்டுவோம். எங்கள் இந்துத்வா, கதாதாரி அனுமனைப் போல் வலிமைமிக்கது” என்றும் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.

பிருஹன்மும்பை மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினைகள் வெடித்திருப்பது கவனத்துக்குரியது. சிவசேனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பிருஹன்மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற பாஜக பெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.