தமிழகத்தில் மீண்டும் பாதயாத்திரை: கூடலூரில் மக்கள் வெள்ளத்தில் ராகுல்காந்தி

தமிழகத்தில் மீண்டும் பாதயாத்திரை: கூடலூரில் மக்கள் வெள்ளத்தில் ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு கூடலூரில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையை அவர் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ம் தேதி கேரளாவுக்கு சென்றார்.

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து, மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வந்த ராகுல்காந்தி மீண்டும் இன்று தமிழகம் வந்தார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு வந்தார். 21-வது நாளாக இன்று கூடலூரில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். நடைப்பயணத்தில் அவருக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் கூடலூருக்கு வந்திருந்தனர். இதனால், கூடலூர் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

கூடலூர் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலிருந்து ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். அங்கு, தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து கூறினர். கோழிப்பாலத்தில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, அங்கிருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார். அவருடன் பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், எம்பிக்கள் ஜோதிமணி, ஜெயகுமார், எம்எல்ஏ செல்வபெருந்தகை உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் கலந்துக்கொண்டனர். தென்னிந்திய நதிகள் இணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூடலூர் ஜிடிஎம்ஒ பள்ளி அருகே யாத்திரையில் தனது ஆதரவாளர்களுடன் கலந்துக்கொண்டார். வழியில் நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரையில் பங்கேற்று, ராகுல்காந்தியை வாழ்த்தி வரவேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in