‘திமுகவை ஆட்சியில் அமரவைத்த தவறை இனி தமிழக மக்கள் செய்யமாட்டார்கள்’ - சசிகலா கண்டனம்

‘திமுகவை ஆட்சியில் அமரவைத்த தவறை இனி தமிழக மக்கள் செய்யமாட்டார்கள்’ - சசிகலா கண்டனம்

திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவறை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. மேலும் பொதுமக்கள் நிம்மதியிழந்து வேதனையால் தவிக்கிறார்கள். நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் புரட்சிப் பயணம் மேற்கொண்டபோது கூட திமுகவினரின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருந்தேன்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற திமுகவை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனைப் பார்த்து தமிழக மக்களும், தமிழகத்தை நம்பி தொழில் செய்துகொண்டு இருக்கும் தொழில் நிறுவனத்தினரும் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

அதேபோல், தென்காசி மாவட்டம், பெருமாள்ட்டி பஞ்சாயத்து தலைவர் குருவம்மாளின் கணவர் காளிராஜ், வேலாயுதபுரத்தில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியரிடம் மிரட்டல் விடுக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அனைவராலும் பார்க்க முடிந்தது. அதாவது, பஞ்சாயத்து விவகாரத்தில் எஸ்பி, ஆர்டிஓ என யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு எல்லாம் நாங்கள் தான் என்றும், கட்டுமானப் பணிகள் தொடர எங்கள் கையெழு்து முக்கியம் எனவும் மிரட்டுகிறார்.

அதேபோன்று மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் என்பவர் ஒப்பந்ததாரர்களிடம் தனக்கு கமிஷன் தர வேண்டும் என்று மிகவும் ஆதங்கப்பட்டு பேசுகின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் நாடே பார்க்கிறது. அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் என்று தெளிவாக குறிப்பிட்டு, பில் வந்தவுடன் தனக்கு 3 சதவீதம் கமிஷன் கொடுத்துவிட வேண்டும், இல்லையென்றால் நான் கையெழுத்து போட முடியாது என்று மிகவும் கறாராகப் பேசுகிறார்.

இதுபோன்று திமுகவினரின் அத்துமீறல்கள் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்தது மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் பொதுவெளிக்கு வராமல், அன்றாடம் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் திமுகவினரின் எண்ணிலடங்கா அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.

புரட்சித் தலைவி என்ற ஆளுமை இல்லாததால், திமுகவினரை சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக மக்கள் அமர வைத்துள்ளார்கள். ஆனால் திமுகவினரோ, தமிழகத்தை ஏதோ இவர்களுக்கே பட்டயம் எழுதி கொடுத்தது போல் நினைத்துக் கொண்டு செயல்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

இதுபோன்று திமுகவினர் செய்கிற மக்கள் விரோத செயல்களை தடுக்கவில்லையென்றால், அது தமிழகத்தையும், தமிழக மக்களையும் கடுமையாக பாதிக்கும். அதே சமயத்தில் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவறை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in