காஷ்மீரில் சொத்து வாங்கிய இருவர்: 370-வது பிரிவு ரத்து எதிரொலி

காமதேனு
காஷ்மீரில் சொத்து வாங்கிய இருவர்: 370-வது பிரிவு ரத்து எதிரொலி

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு வெளி மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் அங்கு சொத்து வாங்கியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ப பின்னர் மற்ற மாநிலத்தவர்கள் அங்கு நிலம், இடம் வாங்க அனுமதிக்கப்பட்டது. எனினும் அதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்தநிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு வெளி மாநிலத்தைச் சேர்ந்த எத்தனை பேர் அங்கு சொத்து வாங்கியுள்ளனர் என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் ‘‘மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு வெளி மாநிலத்தில் இருந்து இருவர் சொத்து வாங்கியுள்ளனர். இந்த தகவலை காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது’’ என்றார்.

ஜம்மு -காஷ்மீரில் சொத்துக்களை வாங்கும் போது அரசு அல்லது பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களோ ஏதேனும் நெருக்கடி அல்லது தடைகளை எதிர்கொண்டார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ‘‘இதுபோன்ற எந்த தகவலும் அரசிடம் இல்லை’’ என்றார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு மற்ற மாநிலங்களில் இருந்து பலர் நிலம் வாங்கியிருப்பது அல்லது நிலம் வாங்க விரும்புவது உண்மையா என்ற கேள்விக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

காஷ்மீரில் 15 ஆண்டுகள் வசிக்கும் ஒருவர் வசிப்பிட சான்று பெற முடியும். அதுபோலவே 10 ஆண்டுகள் அங்கு பணி செய்யும் மத்திய அரசு ஊழியருக்கும் நிரந்தர வசிப்பிட சான்று கிடைக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in