
"தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில், பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை, அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில், பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்.
தமிழகத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி. இந்த விடியா அரசின் முதல்வர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுக்காப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.