ஊழல் குறித்து விசாரித்ததால் சாதி ரீதியாக புகார் சொன்னார் பிடிஓ - திமுக

ஊழல் குறித்து விசாரித்ததால் சாதி ரீதியாக புகார் சொன்னார் பிடிஓ - திமுக

சாதியைச் சொல்லித் திட்டி, இடமாற்றம் செய்துவிடுவதாக மிரட்டினார் அமைச்சர் ராஜகண்ணப்பன் என்று முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரை மறுத்து திமுக ஒன்றிய செயலாளர்கள் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதில், ஊழல் குறித்து விசாரித்ததால் சாதி ரீதியாக அவர் பொய்ப்புகார் கொடுத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் சி.பூபதிமணி (கிழக்கு), க.சண்முகம் (மேற்கு) ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

‘கடந்த 26.03.2022 அன்று வேளாண்மை இடு பொருள் வழங்கும் நிகழ்ச்சி முடிந்த உடன் முதுகுளத்தூர் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க அமைச்சர் ராஜ கண்ணப்பன் அழைப்பு விடுத்தார். ஆனால் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அமைச்சரை சந்திக்கவில்லை. மறுநாள் 27.03.2022 காலையில் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து அமைச்சர் விசாரித்தார். இனிமேல் இது போன்று புகார்கள் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அதன் பிறகு 28.03.2022 அன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அவர்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வேண்டுமென்றே பொய்யான தகவல்களுடன் பேட்டியளித்தார்.

எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுக்கு அவப்பெயர் வகையிலும் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.