
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்பட இருக்கின்றன என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று அவர் பேசுகையில், “பாஜக ஆளும் மாநிலங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் பின்தங்கியுள்ளன. இதனால் வேலைவாய்ப்பும், பணப்புழக்கமும் உடைய தமிழகம் தேடி ஏராளமான வட மாநில மக்கள் வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, மாநிலங்களின் அதிகாரங்களை நசுக்குதல், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை போன்றவை ஏற்புடையவை அல்ல.
மத்திய அரசின் உணவு, உர மானியம் குறைப்பு, பெட்ரோல் மானியம் ரத்து போன்றவற்றால் உணவு மற்றும் உரங்களின் விலை உயரும். இவை உள்ளிட்ட மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க இருக்கிறது” இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.