பிரதமர் மோடியை கிண்டல் செய்த பவன் கேரா மன்னிப்பு கோரினார்

பவன் கேரா - மோடி
பவன் கேரா - மோடி

பிரதமர் மோடியின் பெயரை, கவுதம் அதானியின் பெயருடன் கலந்து கிண்டல் செய்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, ‘ நா தவறி சொல்லிவிட்டதாக’ மன்னிப்பு கோரியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான பவன் கேரா, செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் மோடியின் பெயரை தவறாக உச்சரித்தார். அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்தி பேசிய பவன் கேரா, பிரதமர் மோடியின் பெயரை அதானியின் பெயருடன் கலந்து பேசி கிண்டல் செய்தார்.

இதற்கு பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாஜக ஆட்சியிலான அசாம், உபி உள்ளிட்ட மாநிலங்களில் பவன் கேராவுக்கு எதிரான வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி விரைந்த அசாம் போலீஸார், டெல்லி போலீஸார் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படையின் உதவியோடு டெல்லி விமான நிலையத்தில் இன்டிகோ விமானத்தில் பயணப்பட தயாராக இருந்த பவன் கேராவை கீழிறக்கி கைது செய்தனர்.

பிப்.28 வரை பவன் கேராவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து பவன் கேரா ஜாமீனில் பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் ’பிரதமர் பெயரை தவறாக உச்சரித்து விட்டதாகவும், நா தடுமாறியதில் எழுந்த பிழை’ என்றும் குறிப்பிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் பவன் கேரா. எனினும் அவருக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் மொத்தமாக விசாரிக்க உள்ள நிலையில், பேச்சுரிமைக்கான காங்கிரஸ் வாதமும், பிரதமர் மீதான அவதூறுக்கு எதிரான பாஜகவினரும் வாதமும் இந்த வழக்கில் நேரிடையாக மோத உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in