பாஜக அல்லாத முதல்வர்களை சந்திக்க அழைப்பு: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் புது வியூகம்!

பாஜக அல்லாத முதல்வர்களை சந்திக்க அழைப்பு: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் புது வியூகம்!

ஜனவரி மாதம் ரூர்கேலாவில் நடைபெறும் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையின் தொடக்க நிகழ்ச்சிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தானின் அசோக் கெலாட், சத்தீஸ்கரின் பூபேஷ் பகேல் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுகு ஆகிய மூன்று காங்கிரஸ் முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர். இதன் மூலமாக பிஜூ ஜனதா தளத்துக்கும், காங்கிரஸுக்கும் இடையே இணக்கமான உறவு மலரும் என சொல்லப்படுகிறது. ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள பட்நாயக்கின் அழைப்பை காங்கிரஸ் முதல்வர்கள் ஏற்றுக்கொண்டது அரசியல் அரங்கில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.

பட்நாயக்கின் பிஜேடி காங்கிரஸுக்கு எதிரான அமைப்பாகவும், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவும் இருந்தது. தற்போதும்கூட பிஜேடி நரேந்திர மோடி அரசை பல சந்தர்ப்பங்களில் ஆதரிக்கிறது. அரசாங்கத்தின் முக்கிய மசோதாக்கள், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் பாஜகவை பட்நாயக் ஆதரித்தார். ஒடிசாவில் தற்போது பாஜக பிஜூஜனதா தளத்தின் தீவிரமான போட்டியாளராக மாறியுள்ளதால், அக்கட்சி காங்கிரஸுடன் நெருக்கம் காட்ட முயற்சிக்கிறது.

ஒரு காலத்தில் பிஜேபியின் பழமையான கூட்டாளியாகவும், காங்கிரஸின் முக்கிய எதிரியாகவும் இருந்த சிவசேனா, 2019-ல் காங்கிரஸுடன் மகாராஷ்டிராவில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. அதே பாணியில் ஒடிசாவிலும் காங்கிரஸ்- பிஜேடி கூட்டணி அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடக்கவிழா நிகழ்வில் மற்ற எதிர்க்கட்சி முதல்வர்களும், பிஜேடியுடன் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in