‘காங்கிரஸ் ராஜா ராணிகளின் கட்சி’ - அமித் ஷா விளாசல்

அமித் ஷா
அமித் ஷா

இமாசல பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை செய்துவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,காங்கிரஸ் 'ராஜாக்கள் மற்றும் ராணிகளின் கட்சி’ என்று விமர்சித்துள்ளார்.

இமாசல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிக்கல் வான்வழித் தாக்குதல்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல், 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தல் போன்ற பாஜகவின் சாதனைகள் குறித்து பெருமிதமாக பேசினார்.

இமாசல பிரதேசத்தை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதற்கு பாஜகவை மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் மக்களை அமித் ஷா வலியுறுத்தினார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக இமாசல பிரதேச மாநிலம் மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நடவுன் பகுதியில் பாஜக வேட்பாளர் விஜய் அக்னிஹோத்ரியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமித்ஷா, “ வளர்ச்சி என்ற பெயரில் காங்கிரஸுக்கு எதுவும் சொல்ல முடியாது. இமாச்சலத்தில் சில இடங்களை வெல்ல எட்டு முதல் 10 இடங்களில் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இங்கும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவர் இருக்கிறார். ஆனால் அவர் ஆக மாட்டார் என்பது அவருக்குத் தெரியாது. காங்கிரஸில் யாரோ ஒருவரின் மகனோ அல்லது மகளோதான் முதல்வராக இருக்க முடியும். உங்களுக்கு வாய்ப்பு ஒருபோதும் வராது ”என்று அவர் நடவுன் காங்கிரஸ் வேட்பாளரைக் குறிப்பிட்டு பேசினார்.

மேலும்,"இது ராஜாக்கள் மற்றும் ராணிகளின் கட்சி, வேறு யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஜனநாயகத்தில் ராஜா-ராணிகளுக்கு இடம் இருக்கிறதா?. மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி, தற்போது இமாசல பிரதேச மக்களுக்கு தேர்தல் உத்தரவாதம் அளித்து வருகிறது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in