“அடிவருடிகளின் கட்சி சமாஜ்வாதி!”

பாஜகவுக்குத் தாவிய ஹரி ஓம் யாதவ் கடும் தாக்கு
ஹரி ஓம் யாதவ், நரேஷ் சைனி
ஹரி ஓம் யாதவ், நரேஷ் சைனி

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்க இன்னும் ஒரு மாதம் கூட அவகாசம் இல்லை. அதற்குள் உச்சகட்ட அனலில் தகிக்கிறது அம்மாநில அரசியல் களம். அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியை நோக்கிப் படையெடுக்கும் அதே நேரத்தில், சமாஜ்வாதியிலிருந்தும் காங்கிரஸிலிருந்தும் பாஜகவுக்கு அணிமாற்றம் நடந்திருக்கிறது.

ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் உள்ள சிர்ஸாகஞ்ச் தொகுதியின் சமாஜ்வாதி சட்டப்பேரவை உறுப்பினரான ஹரி ஓம் யாதவ், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தரம்பால் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ நரேஷ் சைனி ஆகியோர் நேற்று பாஜகவில் சேர்ந்தனர்.

பாஜகவில் இணைந்த கையோடு, சமாஜ்வாதி கட்சியைச் சரமாரியாக விமர்சித்துவருகிறார் ஹரி ஓம் யாதவ். “முலாயம் சிங் யாதவின் கட்சியாக சமாஜ்வாதி கட்சி இல்லை. அது அகிலேஷ் யாதவைச் சுற்றி இருக்கும் அடிவருடிகளின் கட்சியாக இருக்கிறது. அவர்கள் அவரைப் பலவீனப்படுத்த விரும்புபவர்கள். நான் சமாஜ்வாதி கட்சியில் இருப்பதை ராம்கோபால் யாதவும் அவரது மகனும் விரும்பவில்லை. அவர்களது வளர்ச்சிக்கு நான் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்” என்று அவர் கூறியிருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளரான ராம்கோபால் யாதவ், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவிவகிக்கிறார்.

சமாஜ்வாதி தனது கொள்கைகளிலிருந்து விலகிவிட்டது என்றும் இந்தத் தேர்தலில் பாஜகவே வெல்லும் என்றும் ஹரி ஓம் யாதவ் கூறியிருக்கிறார். சமாஜ்வாதி மூன்று முறை எம்எல்ஏ-வாக இருந்த ஹரி ஓம் யாதவ், முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உறவினர் ஆவார்.

ஃபிரோஸாபாத் நகராட்சி தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த ஹர்ஷிதா சிங் வெற்றிபெற ஹரி ஒம் யாதவ் உதவிசெய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ‘கட்சி விரோத நடவடிக்கைகள்’ காரணமாக, கடந்த பிப்வரியில் அவர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது சமாஜ்வாதி கட்சித் தலைமை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in