அப்துல்லா கண்டுபிடித்த ‘அருஞ்சொல்’!

எம்.எம்.அப்துல்லா
எம்.எம்.அப்துல்லா

அண்மைக்காலமாக தமிழகத்தில் அரசியல் நாகரிகம் குழிதோண்டி புதைக்கப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அதிலும் திமுகவினரும் பாஜகவினரும் நடத்தும் வார்த்தைப் போர் தரம்தாழ்ந்து கொண்டே போகிறது. பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுக்கு வக்காலத்து வாங்கும் நடிகை கஸ்தூரி, தீபாவளி சமயத்தில் திமுகவினரை கிண்டல் செய்யும் விதமாக ‘திராவிடியா பசங்க’ என்று ட்விட் செய்திருந்தார். இதற்குப் பலதரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் பாஜககாரர்கள் இந்த வார்த்தைகளை கொண்டாட்டத்துடன் எடுத்து தங்களது பதிவுகளில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

இப்போது இதற்கு பதிலடியாக புதிய வார்த்தை ஒன்றை கண்டுபிடித்து பிரகடனம் செய்திருக்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா. 'திராவிடியா என்று சொல்கிறவர்களை பார்த்து இனிமேல் தேசிடியா என்று சொல்லுங்கள். அவர்கள் நல்ல அர்த்தத்தில் சொன்னால் நம்முடையதும் நல்ல அர்த்தமாகட்டும். அவர்கள் கெட்ட அர்த்தத்தில் சொன்னால் நம்முடையதும் கெட்ட அர்த்தம் ஆகட்டும்' என்று ட்விட் போட்டிருக்கிறார் அப்துல்லா.

“தினம் தினம் கழகத்தினர் எதையாவது பேசி, ஏதாவது விவகாரத்தில் ஈடுபட்டு என்னைத் தூங்கவிடாமல் செய்துவிடுகிறார்கள்” என பொதுக்குழுவில் ஆதங்கப்பட்ட ஸ்டாலின், வார்த்தைகளை அளந்து பேசும்படி கட்சியினருக்கு கட்டளையே போட்டிருந்தார். ஆனால், அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது அப்துல்லாவின் ட்விட்டிலிருந்தே தெரிகிறது. பாஜகவினர் செய்வது அத்துமீறலாக இருந்தாலும் அதற்குப் பதிலடி கொடுப்பதாகச் சொல்லிக்கொண்டு இன்னொரு அத்துமீறலைச் செய்வது சரியாகாது என்பதை கண்ணியம் பேசும் திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் இங்கே அரியணையில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in