எதிர்க்கட்சியே இல்லாத நாடாளுமன்றம்: எப்படிச் சாதிக்கப் போகிறது பாஜக?

மோடி
மோடிபாஜக வியூகம்

நாடாளுமன்றத்தில் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்துவிட வேண்டுமென்ற உறுதியோடு காய்நகர்த்துகிறது பாஜக. இந்த முறையும் பாஜக வென்று மீண்டும் மோடி பிரதமரானால், நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வென்று பிரதமரானவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

கடந்த 2019-ல் 303 தொகுதிகளில் வாகை சூடிய பாஜக, தற்போது அதைவிட கூடுதலான தொகுதிகளை இலக்காக வைத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனாலும், கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இப்போது பாஜகவுக்கு எண்ணற்ற சவால்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடிபாஜக பலே வியூகம்

2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களை பிடித்த அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு 52 தொகுதிகள் மட்டுமே கைவசமானது. 2014-ல் நாடெங்கும் மோடி அலை வீசியபோதுகூட பாஜகவுக்கு 282 தொகுதிகள் மட்டும் தான் சாத்தியமானது. ஆனால் 2019-ல், பண மதிப்பிழப்பு சர்ச்சை, ஜிஎஸ்டி, ரஃபேல் விவகாரம் என ஆட்சிக்கு எதிரான பல்வேறு அஸ்திரங்களை எதிர்க்கட்சிகள் வீசியபோதும், மோடி- அமித்ஷா கூட்டணியின் தேர்தல் வியூகங்களால் பாஜக இன்னும் அதிமகான இடங்களை பிடித்து ஆட்சியைத் தக்கவைத்தது. அந்த தைரியத்தில் இப்போது 400 தொகுதிகளை இலக்காக குறித்திருக்கிறது மோடி - அமித்ஷா கூட்டணி.

ஆனால், மேலோட்டமாக பார்க்கும்போது பாஜக எளிதாக வென்றுவிடுவது போல தோன்றினாலும், கள நிலவரம் அப்படி இல்லை என்பதை பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் உணர்ந்துள்ளனர். 10 ஆண்டுகள் ஆட்சியால், மக்களிடம் ‘ஆட்சிக்கு எதிரான மனநிலை’ இயல்பாகவே எழுந்துள்ளது. அதேபோல 2019 காலகட்டத்தை விடவும் இப்போது மாநிலக் கட்சிகள் வலுவடைந்துள்ளன. முக்கியமாக, காங்கிரஸ் மீதிருந்த அதிருப்தி கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்துள்ளது. எனவே 2019 தேர்தலை விடவும் இப்போது பலமான வியூகங்களை வகுக்க வேண்டும் என்று கணக்குப் போடுகிறது மோடி- அமித்ஷா டீம்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா2024 நாடாளுமன்றத் தேர்தல்

கட்டம் கட்டப்பட்ட 160 தொகுதிகள்!

பாஜகவின் தேசிய செயற்குழு கடந்த ஆண்டு பலமுறை கூடி 2024 மக்களவைத் தேர்தல்களுக்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியது. இதில் ஆரம்ப கட்டத்தில் பாஜக வெற்றிக்கு சவாலாக இருக்கும் ‘கவனம் செலுத்தக்கூடிய’ 111 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அந்த தொகுதிகளில் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள், பூத் கமிட்டி வேலைகள், அரசுத் திட்டங்கள், கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் என மேலோட்டமாக பல்ஸ் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ‘கவனம் செலுத்தும்’ தொகுதிகளின் எண்ணிக்கை 144 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதன் எண்ணிக்கை 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை வட மாநிலங்களில் உள்ளவைதான். இந்த 160 தொகுதிகளுக்கும் தற்போது மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக விசிட் அடித்து வருகிறார்கள். அதுபோல ஒவ்வொரு மத்திய அமைச்சருக்கும் 3 அல்லது 4 ‘கவனம் செலுத்தக்கூடிய’ தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் பொறுப்போடு இந்த தொகுதிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்ற உத்தரவையும் மேலிடம் இட்டுள்ளது.

ஏன் இந்த 160 தொகுதிகள் சவாலாக மாறியது என்று பார்ப்போம். கடந்த 2019ல் பிஹாரில் பாஜக - ஜேடியு - எல்ஜேபி கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை வென்றது. ஆனால் இம்முறை், அங்கே ஜேடியு, ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. சென்ற முறை மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41-ல் பாஜக - ஒருங்கிணைந்த சிவசேனா கூட்டணி வென்றது. இம்முறை அங்கே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

அதேபோல அப்போது கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ல் பாஜக வென்றது. ஆனால், இம்முறை அங்கே ‘கை’யின் பக்கம் காற்று வீசுகிறது. கடந்த முறை உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 64-ல் வென்றது. ஆனால், இப்போது அங்கே அகிலேஷ் யாதவ் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்திலும் 2019-ல் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18-ல் பாஜக வாகை சூடியது. ஆனால், இம்முறை சிங்கிள் டிஜிட்டில் பாஜகவை முடக்க மம்தா சபதம் எடுத்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

கடந்த தேர்தலில் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக வென்றது. இப்போது அர்விந்த் கேஜ்ரிவால் முட்டுக்கட்டை போடுவார். 2019-ல் இமாச்சலில் மொத்தமாக 4 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இப்போது அங்கே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சென்ற முறை ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 11-ல் பாஜக வென்றது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 24 தொகுதிகள் பாஜக வசமானது. மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28-ல் பாஜக வென்றது. சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 9-ல் பாஜக வென்றது. இந்த மாநிலங்களில் எல்லாம் கடந்த முறையைப் போல இப்போதும் வெற்றிக்கனியை தக்கவைப்பது அத்தனை சுலபமில்லை என்பது பாஜகவுக்கு தெரிகிறது. அதனால்தான் இம்முறை ‘கவனம் செலுத்தக்கூடிய’ 160 தொகுதிகளை கண்டறிந்து, கச்சிதமாக வேலை செய்து வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இருக்கும் சூழலில், இந்த தொகுதிகளுக்கு இனி வாரா வாரம் மத்திய அமைச்சர்களின் வருகை இருக்கும் என்கிறார்கள். அதுபோல பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் மாதம் ஒரு முறையேனும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ‘லோக்சபா பிரவாஸ் யோஜனா’ என்ற சுற்றுப்பயணத் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

 பாஜக
பாஜக 2024 நாடாளுமன்றத் தேர்தல்

9 மாநிலத் தேர்தல்களின் மீது நம்பிக்கை!

2024 மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிச் சுற்றாக இந்த ஆண்டில் 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் திரிபுரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகியவை பாஜக ஆளும் மாநிலங்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள். தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் முதல்வராக உள்ளார். மேகாலயா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்தன. மிசோரமும் தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப்பெற வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்து வருகிறது பாஜக. இதன் தாக்கம் பட்ஜெட்டிலும் எதிரொலித்தது.

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் அங்கே காங்கிரஸின் கை ஓங்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் கர்நாடகாவின் பாசனத் திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியும், விவசாயிகளுக்கான வறட்சி சிறப்பு நிதியாக ரூ.5,300 கோடியும் ஒதுக்கப்பட்டது. அதுபோல இந்தியாவில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காகவும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவை கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநில தேர்தல்களை கருத்தில் வைத்தே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதேபோல் இனிவரும் மாதங்களில் ஓவ்வொரு மாநிலங்களின் தேவைக்கேற்ப திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அதேபோல, விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள் என ஓவ்வொரு தரப்புக்குமான தேவைகள் குறித்த விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தேர்தல் நெருக்கத்தில் இது தொடர்பான அறிவிப்புகளையும் எதிர்பார்க்கலாம்.

பாஜக தலைவர்கள் மோடி, நட்டா, அமித் ஷா
பாஜக தலைவர்கள் மோடி, நட்டா, அமித் ஷா2024 நாடாளுமன்றத் தேர்தல்

தென்னிந்தியாவுக்கும் வியூகம்:

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி என தென்னிந்தியாவில் மொத்தம் 130 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2019-ல் பாஜக 30 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதில் கர்நாடகாவில் மட்டுமே 25 தொகுதிகள். தெலங்கானாவில் பாஜக 4 தொகுதிகளை கைப்பற்றியது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் பாஜகவின் வெற்றி எண்ணிக்கை பூஜ்ஜியம். ஆனாலும் இந்த முறை எப்படியேனும் தென் மாநிலங்களில் 50 தொகுதிகளில் வெல்வதை இலக்காக வைத்துள்ளது பாஜக. அதற்காக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.

தெலங்கானா, கேரளாவில் கூட்டணியை வலுப்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றாலும், தமிழ்நாடு, ஆந்திராவில் பலமான கூட்டணியை அமைத்து இரட்டை இலக்க வெற்றியை பெறவேண்டும் என பாஜக மேலிடம் திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள். இதற்காக பலமாக உள்ள கட்சிகளின் வாக்குகளை சிதறவைக்க மூன்றாவது, நான்காவது அணிகளை கட்டமைக்கும் மற்றொரு அஸ்திரத்தையும் பாஜக கையில் எடுக்கலாம் என்கிறார்கள். எல்லாவற்றையும் விட, தென் மாநிலங்களில் உள்ள ஒரு தொகுதியில் பிரதமர் மோடி களமிறங்கவும் வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பாஜக
பாஜக2024 நாடாளுமன்றத் தேர்தல்

எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றம்!

கடந்த வாரம் ஒரு ஊடகத்திடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “2024-ல் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளே இருக்கமாட்டார்கள்” என தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். “இது பரபரப்புக்காக சொல்லப்படவில்லை, களநிலவரம் அதுதான்” என்கின்றனர் பாஜகவினர்.

“காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் மூன்றாவது, நான்காவது இடத்துக்குப் போய்விட்டது. எனவே அக்கட்சியால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது. அதுபோல அர்விந்த் கேஜ்ரிவால், சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் காங்கிரஸுடன் கைகோக்கும் மனநிலையில் இல்லை. இதனால் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வாய்ப்பே இல்லை. இதன் காரணமாக, வாக்குகள் பலவாறாக சிதறும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாமரை எந்தச் சிக்கலும் இல்லாமல் மீண்டும் மலரும்” என்கிறார்கள் பாஜகவினர்.

ஆட்சிக்கு வந்தது முதல், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பதை தாமரைக் கட்சியினர் தாரக மந்திரமாகச் சொல்லி வருகிறார்கள். இந்தத் தேர்தலுக்கு அதை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்கள், ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றது, இந்திய பொருளாதாரம் உலகளவில் 5 இடம் பிடித்துள்ளது, டிஜிட்டல் பரிவர்த்தனை, தீவிரவாத செயல்கள் ஒழிப்பு போன்றவற்றை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சார வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

பூத் கமிட்டிகளுக்கு பூஸ்டர் கொடுக்கவும் பாஜக தலைமை பணித்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்டவற்றைக் கண்டறியும் பணிகளைத் தொடங்கியுள்ளது பாஜக. இன்னொருபுறம், தேர்தல் பணியில் தொய்வு காட்டும் பூத் பொறுப்பாளர் முதல் தேசிய பொறுப்பாளர்கள் வரைக்கும் மாற்றப்படலாம் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் மதம், சாதி, புவியியல், வாக்காளர்களின் மனநிலை போன்ற சமூக ரீதியான புள்ளிவிவரங்களும் திரட்டப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டால் அதுவும் வட மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்குகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-க்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் வாக்கு சதவீதத்தை வைத்திருந்த சில மாநிலங்களில் கூட, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆட்சியையே கைப்பற்றி ஆச்சரியத்தை கொடுத்தது பாஜக. அந்த வகையில் ‘எதிர்க்கட்சியே இல்லாத 2024’ என்ற மேஜிக்கையும் மோடி - அமித் ஷா கூட்டணி நிகழ்த்திக் காட்டுகிறதா என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in