பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்: தமிழக அரசு திட்டவட்டம்

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்: தமிழக அரசு திட்டவட்டம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு 100 ரூபாய் செலவு செய்வதன் மூலம் மாநிலத்திற்கு 325 ரூபாய் வருமானம் கிடைக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிய செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.  ஏறக்குறைய 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்துப் பேசப்பட்ட போதிலும், தற்போதுதான் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர்.  20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்க போதுமானதாக இருக்கும். இத்திட்டத்திற்கு 100 ரூபாய் செலவு செய்வதன் மூலம் மாநிலத்திற்கு வருமானமாக 325 ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கிருந்து அனுப்ப வேண்டிய சரக்குகள் பெங்களூர் விமான நிலையத்திற்கு மாறியுள்ளன. அதே போல ஹைதராபாத் விமானநிலையமும் தமிழக வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துள்ளது. இவ்விரு விமான நிலையங்களின் ஆண்டு வளர்ச்சி 17 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம் பின்தங்கியதற்குக் காரணம் புதிய விமான நிலையத்தை உருவாக்காததே ஆகும்.

ஏற்கெனவே இயங்கிவரும் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த முயலும்போது அதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும். இதனால் சர்வதேச அளவிலான பயணிகள் வரத்து அதிகரிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in