`தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம்'- ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

`தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம்'- ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

`பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20,000 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழுக் கொள்ளளவும் வீணாகின்ற சூழ்நிலை உருவாகியிருப்பதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `மழை அதிகமாகப் பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடுவதையும், கரையை உடைத்துக் கொண்டு உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் சேதம் விளைவிப்பதையும், அனைத்து நீரும் கடலில் சென்று கலப்பதையும் தடுக்கும் பொருட்டு, மழை நீரைத் தேக்கி வைத்து தேவைப்படும் காலத்தில் உதவுவதற்காக அணைகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு கட்டப்பட்ட அணைகளை முறையாக பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசிற்கு உண்டு. இந்தக் கடமையிலிருந்து மாநில அரசு தவறும்பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும், விவசாயப் பணிகள் பாதிக்கின்ற அபாயமும் உருவாவது தவிர்க்க முடியாதது.

அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20,000 கன அடி தண்ணீ ர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழுக் கொள்ளளவும் வீணாகின்ற சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் வந்துள்ள செய்தி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே என விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், தற்போது பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி கடலில் கலப்பதன் காரணமாக, இந்த ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயத்திற்கு தண்ணீர் வராது என்றும், தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு இனிமேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்பில்லை. எனவே, இரண்டாவது முறையாக டிசம்பர் மாதம் முதல் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்காக திறந்துவிட வேண்டிய தண்ணீர் வராது என்றும், தென்னை விவசாயம் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீர் குறையக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு, பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை உடனடியாக சரிசெய்யவும், இந்த ஆண்டு விவசாயத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யவும், இனி வருங்காலங்களிலாவது பருவமழைக்கு முன்பே அணையின் பராமரிப்புப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in