ஒரு கோடி ரூபாய் வழங்கிய கலைஞர் பெயரை மறந்த பபாசி: அமைச்சர் தங்கம் தென்னரசு டென்ஷன்

ஒரு கோடி ரூபாய் வழங்கிய கலைஞர் பெயரை மறந்த பபாசி: அமைச்சர் தங்கம் தென்னரசு டென்ஷன்

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி தன் சொந்த நிதியில் இருந்து வழங்கிய 1 கோடி ரூபாயில் வழங்கப்படும் கலைஞர் பெயரிலான விருதுகள் குறித்த அறிவிப்பில் அவர் பெயரை போடாமலே விருதுகளை பபாசி(தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்) அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு சென்னையில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி, தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கினார். இந்த தொகையைக் கொண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்குமாறு விழாவில் அவர் தெரிவித்தார். அதன்படி, இந்த விருதுகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கலைஞர் பொற்கிழி என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 46- வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை (ஜன.6) முதல் 22-ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. நாளை மாலை புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த புத்தகக் காட்சி சர்வதேச புத்தகக் கண்காட்சியாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் புத்தகக் கண்காட்சி குறித்தும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்கள் மற்றும் பபாசியின் விருது பெறுபவர்கள் குறித்தும் பபாசி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. தேவிபாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதைகள்), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பேரா.பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை/ஆய்வு) ஆகிய 6 பேருக்கு விருது பட்டியலை அறிவித்த பபாசி, இதில் கலைஞர் பெயரை குறிப்பிடவே இல்லை. இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்தில் வழங்குமாறு கோரிய விருது பற்றிய அறிவிப்பிற்கு, அவரது பெயரையே குறிப்பிடாமல் விருது பட்டியலை பபாசி வெளியிட்டுதற்கு படைப்பாளர்கள் மத்தியில் கண்டனமும் எழுந்துள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

இதுகுறித்து, தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் நிறுவப்பட்ட விருதிற்கு, அவர் பெயரையே போடாமல், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வெறுமனே 'பொற்கிழி விருது' என அவர்களது அமைப்பின் பேரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறதென்றால்.." என காட்டமாக பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in