காலில் விழுந்த ஊராட்சி மன்றத்தலைவர்: ராகுல் அடித்த 'நச்' கமெண்ட்

செய்தியாளர் சந்திப்பில் ராகுல்  காந்தி
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி படம்: ஜாக்சன் ஹெர்பி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான தேச ஒற்றுமை யாத்திரையைத் துவங்கியிருக்கிறார். மூன்றாம் நாளான இன்று ராகுல் காந்தி காலில் ஊராட்சிமன்றத் தலைவர் ஒருவர் திராவிட கட்சிகளின் பாணியில் விழுந்து ஆசி வாங்க முயல, அவரைத் தடுத்து ராகுல் சொன்ன நச் கமெண்ட் காங்கிரஸ் தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குமரிமாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களும் இதனால் குமரியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் மகேந்திரனும், அவருடன் வந்த சில ஊராட்சி மன்ற தலைவர்களுமாக ராகுல் காந்தி காலில் விழ முயன்றனர். அதன் பின்னர் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"இளந்தலைவர் ராகுல்ஜியைப் பார்த்ததும் காலில் விழுந்து ஆசிவாங்க முயன்றோம். அதை உடனே மின்னல் வேகத்தில் தடுத்தார், தடுத்ததும், 'ஏன் என் காலில் விழுகிறீர்கள்' என்றும் கேட்டார். உடனே 1988 ராஜீவ்காந்தி எங்கள் கிராமத்திற்கு வந்திருந்தார். சாரணர் இயக்க மாணவராக இருந்தேன். அப்போது அவருக்கு ரோஜா பூவைக் கொடுத்துவிட்டு ஆரத் தழுவிய தருணம் எனக்கு வாய்த்தது. இன்று அவர் நம்மிடையே இல்லை. அவரது மகனான உங்களைப் பார்த்ததும் எனக்கு அப்பாவின் நினைவுகள் வந்தது. உங்கள் குடும்பத்தின் தியாகம் தெரிந்தது.

பாட்டியையும், தந்தையையும் இந்த நாட்டிற்காகவே இழந்தீர்கள். உங்கள் தகப்பனாரை நினைத்து உங்களைப் பார்த்தோம். அதனால் தான் உங்கள் காலில் விழுந்தோம் என்று சொன்னேன். உடனே ராகுல், உன்னைவிட சிறந்த ஒருவன் இருக்கிறான் என நீ நினைத்தால் உன்னால் சிறந்த பஞ்சாயத்துத் தலைவராக இருக்கமுடியாது. அனைவரையும் சமமாக பாவித்து, கேள்வி கேட்கும் அதிகாரத்தை நீ அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார். எந்தத் தலைவன் காலில் விழுந்தால் இன்று தடுக்கிறார்? அதிகாரத்தை பரவலாக்கச் சொல்கிறார். ராகுல் அந்த வகையில் தனித்துவமான தலைவர்தான் ”என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in