சீட் இல்லை... வருத்தம் மறந்து முரசொலியை ஜொலிக்க வைப்பாரா பழனிமாணிக்கம்?

முதல்வருடன் முரசொலி
முதல்வருடன் முரசொலி

திமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக முரசொலி என்ற புதிய முகம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பலமுறை களம்கண்டவரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை மீறி அவரால் இந்தத் தேர்தலில் தலை தூக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முரசொலி
முரசொலி

தஞ்சைத் தொகுதியில் திமுகவின் பழனிமாணிக்கம் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு முகம். மூன்று முறை தோற்றாலும் ஆறு முறை இந்த தொகுதியை வென்றவர். இவரை மீறி 2014-ம் ஆண்டு தஞ்சையைச் சேர்ந்தவரான டி.ஆர்.பாலு வேட்பாளராக நிறுத்தபட்டார். அப்போது மாவட்டச் செயலாளர் ஆகவும் தஞ்சை திமுகவில் பவர்ஃபுல் மனிதராகவும் இருந்த பழனிமாணிக்கம், தனது ஆதரவாளர்களை டி.ஆர்.பாலுவுக்காக களப்பணி செய்யவிடவில்லை. அதனாலேயே டி.ஆர்.பாலு தோற்றுப் போனார்.

அவரது தோல்விக்கு உட்கட்சி சூழ்ச்சிகளே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.  அதனால் பழனிமாணிக்கத்தின் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பழனிமாணிக்கத்துக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் வெற்றியும் பெற்றார்.

டி.ஆர்.பாலுவுடன் பழனிமாணிக்க்ம்
டி.ஆர்.பாலுவுடன் பழனிமாணிக்க்ம்

இந்த நிலையில் இந்தத் தேர்தலிலும் தஞ்சை தொகுதிக்கு சீட் கேட்டிருந்தார் பழனிமாணிக்கம். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு தஞ்சை வடக்கு  ஒன்றிய திமுக செயலாளரான முரசொலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளையவரான இந்த முரசொலி மாவட்டம் முழுவதும் அறியப்பட்டவர் இல்லை என்றாலும் தனக்கென ஒரு நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். நாகரிகமான அரசியல்வாதி என்று பெயர் எடுத்திருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிக்கப்பட்டது முதல் அவரோடு இணைந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார் முரசொலி.  இவரது பணி அன்பில் மகேஸுக்கு பிடித்துப்போய் தான் இளைஞர் அணி கோட்டாவில் இவருக்கு சீட் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், தனக்கான வாய்ப்பைத் தட்டிவிட்ட இவரையும் தோற்கடிக்க பழனிமாணிக்கம் முன்புபோல களம் இறங்குவாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. ஆனால், அவர் அப்படிப்பட்ட நிலையில் இப்போது இல்லை என்கிறார்கள்.  தஞ்சை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் அவரை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி கட்சியில் பெரிய பொறுப்பு அல்லது வேறு வகையில் ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் பழனிமாணிக்கமே நினைத்தாலும் இப்போது திமுகவினரை முரசொலிக்கு எதிராக வேலை செய்ய வைக்க முடியாது என்ற நிலை தான் உள்ளது.  அவரால் உருவாக்கப்பட்டவர்கள் அனைவருமே அவரது மேல்தட்டு அரசியல் பிடிக்காமல் அவரிடமிருந்து ஒதுங்கிவிட்டார்கள்.  மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் அவர் தற்போது இல்லை. அதனால் இப்போது தஞ்சைத் தொகுதியைப் பொறுத்தவரை எந்தப் பிடிமானமும் இல்லாமல் தான் நிற்கிறார் பழணிமாணிக்கம்.

தஞ்சை திமுகவை முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் அன்பில் மகேஸ். அதனால் பழனிமாணிக்கம் அப்படி எதுவும் உள்ளடி வேலைகள் செய்தாலும் அதை மீறி கட்சிக்காரர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றி முரசொலியை வெற்றி பெறவைப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் சிவநேசனும், பாஜக சார்பில் கருப்பு முருகானந்தமும் போட்டியிடுகிறார்கள் என்றாலும் அவர்கள் இருவருமே இரண்டாம் இடத்திற்குத் தான் போட்டி என்ற நிலையில் இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகள் மற்றும் திமுகவினரின் சுறுசுறுப்பு ஆகியவற்றால் தஞ்சையில் முரசு ஒலிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in