பாகிஸ்தான் பத்திரிகையாளரின் குற்றச்சாட்டு: மறுக்கும் ஹமீத் அன்சாரி... புகைப்படம் வெளியிட்டது பாஜக!

பாகிஸ்தான் பத்திரிகையாளரின் குற்றச்சாட்டு: மறுக்கும் ஹமீத் அன்சாரி... புகைப்படம் வெளியிட்டது பாஜக!

இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி மீது பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் என தெரிவித்து புகைப்படங்கள் சிலவற்றை பாஜக வெளியிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது ‘தாம் ஐந்து முறை இந்தியாவுக்குச் சென்றதாகவும், இந்தியாவில் சேகரிக்கப்பட்ட முக்கியமான தகவல்களை தனது நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு தெரிவித்ததாகவும்’ பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்ஸா கூறியது பரபரப்பை உருவக்கியது. மேலும், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் அழைப்பின் பேரில் தான் இந்தியா வந்ததாகவும், அவரைச் சந்தித்ததாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, இது தொடர்பாக ஹமீது அன்சாரி விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால், பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்ஸாவை தனக்கு தெரியாது, அவரை எந்த மாநாட்டிற்கும் தான் அழைத்ததில்லை என்று ஹமீத் அன்சாரி உறுதியாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸின் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ள பாஜக, 2009-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாதம் குறித்த மாநாட்டின் போது ஹமீது அன்சாரி மற்றும் நுஸ்ரத் மிர்ஸா ஆகியோர் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

நுஸ்ரத் மிர்ஸாவை மாநாட்டுக்கு அழைத்ததாக கூறப்படும் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஹமீது அன்சாரி, “இந்திய துணை ஜனாதிபதியின் நிகழ்ச்சியில் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் பொதுவாக வெளியுறவு அமைச்சகம் மூலம்தான் செய்யப்படுகிறது. இவர்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை விழா ஏற்பாட்டாளர்கள் தான் முடிவு செய்தனர். நான் அந்த மாநாட்டை தொடங்கி வைத்தேன் அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவோ, சந்திக்கவோ இல்லை” என தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்ஸாவின் பேட்டியின் கிளிப்புகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன, அதில் ஹமீத் அன்சாரி கலந்துகொண்ட இந்தியாவில் நடந்த பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கில் தானும் கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in