பாரதியார் பாடலை மேற்கோள்காட்டி பாஜகவை சாடிய ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கினார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியைக் கொடுத்து காந்தி மண்டபத்தின் முன்பு இருந்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். ராகுல் அங்கிருந்து 600 மீட்டர் தொலைவில் நடந்து வந்து பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ராஜஸ்தான், சட்டீஸ்கர் முதல்வர்கள் உள்பட காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்து வரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, “செய் அல்லது செத்துமடி என முழங்கியவர் காந்தியடிகள். வெள்ளையனை வெளியேற்றும்வரை இந்த லட்சியப்பயணம் முடியாது என்று கொள்கையோடு இருந்தார் காந்தி.

வெள்ளையர்களை வெளியேற்றும் போராட்டத்தில் காங்கிரஸ், இந்தியர்களைத் திரட்டி கைகோர்த்து முழுவீச்சில் நின்றது. அவர்கள்(பாஜகவினர்) அந்த போராட்டத்திலும் இல்லை. நாம் இப்போது பாரதத்தை நினைப்போம் என்கிறோம். அதையும் கேலி செய்கிறார்கள். நாம் இந்தியாவை இணைக்க வேண்டும் என்கிறோம். அவர்கள் சின்னாபின்னமாக்க வேண்டும் என்கிறார்கள்.

இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இந்த போராட்டத்திலும் அவர்கள் பங்களிப்பு இல்லை. ஆனாலும் பிளவுபடுத்தும் சக்தியை வெளியேற்றும்வரை எங்கள் பயணம் முடியாது. நான் பாரதியாரின் ஒரு பாடலை மேற்கோள் காட்டுகிறேன். ஒளிபடைத்த கண்ணினாய் வா வா என்னும் அந்தப் பாடலில் ஒற்றுமை மிகவே நாடெல்லாம் ஒரு பெரும் செயல் செய்வாய் வா..வா என்கிறார் பாரதியார். நாட்டின் ஒற்றுமை மிக வேண்டிய தேவை இன்று இருக்கிறது. அதற்காகத்தான் ராகுலின் இந்த நடைபயணம்”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in