தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 28 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும் வெல்லும் என India TV வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது அதிமுக , பாஜக கூட்டணி உடைந்துள்ளது. இதனால் அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் எந்தப் பக்கம் செல்வது என்று குழப்பத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் எந்த ஒரு பிளவும் இல்லை. அதேநேரத்தில் பாஜக கூட்டணியை முறித்ததால் அதிமுக, முஸ்லிம்கள் வாக்குகளை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக India TV-CNX ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளன. அதில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களில் 28 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக மட்டும் 21 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 6 இடங்களையும், பாமக 1 இடத்திலும், இதர கட்சிகள் நான்கு இடத்திலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இந்த கருத்து கணிப்பு.
பதிவாகும் வாக்குகளில் திமுக 31%, அதிமுக 25%, காங்கிரஸ்- 11 %, பாஜக 7%, பாமக -6%, இதர கட்சிகள்- 20% வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் நவ் டிவி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக 20 முதல் 24 இடங்கள்; காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்; அதிமுக 4 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவுக்கு 0 முதல் 1 எனவும் டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் தெரிவித்திருந்தன. அதாவது திமுக தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’க்கு மொத்தம் 30 முதல் 34 இடங்கள் கிடைக்கும் என்பது டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பாக இருந்தது.