`ஈரோடு கிழக்கில் எங்களின் பிரச்சார பீரங்கி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்'- அண்ணாமலை கிண்டல்

அண்ணாமலை
அண்ணாமலைஈரோடு கிழக்கில் எங்களின் பிரச்சார பீரங்கி ஈவிகேஎஸ் இளங்கோவன் - அண்ணாமலை கலகல

’’கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல்காந்தி இருந்து வெற்றியைத் தேடித்தந்தார். அதேபோல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கியாக இருப்பார்’’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதை வரவேற்கும் விதமாக 10 லட்சம் மரங்கள் நடும் தொடக்க நிகழ்ச்சி பாலவாக்கம் கடற்கரை அருகே நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மரங்களை நட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர், ‘’இலங்கையில் 13-வது சட்ட திருத்தம் பெயர் அளவிற்கு மட்டும் தான் உள்ளது. இதுத் தொடர்பாக இலங்கை பயணம் மேற்கொள்ளவுள்ளோம். இலங்கை மீனவர்கள் பிரச்சினையில் பாஜக அரசு திறம்பட கையாண்டு வருகிறது. பாஜக அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு குறைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் பெயருக்காக இலங்கை பிரச்சினை குறித்து பேசி வருகின்றன. ஆனால் பாஜகவை பொறுத்தவரை ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இலங்கை செல்ல உள்ளதால் நான் கலந்துக் கொள்ளவில்லை. மூத்தத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துக் கொள்ளவுள்ளார். உயிரைக் கொடுத்தாவது அதிமுக வேட்பாளரை வெற்றிப் பெற வைக்கப் பாடுபடுவோம். கூட்டணி தர்மத்தின்படி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். அது களத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். அதனால் தான் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆளுங்கட்சி இடைத்தேர்தலை சந்திக்கப் பயந்து இத்தனை திமுகவினரை இறக்கி, முதலமைச்சர் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல் காந்தி இருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எங்களுடைய பிரச்சார பீரங்கியாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருக்கிறார். அவர் பேச ஆரம்பித்தால் எங்களுக்கு ஓட்டு தானாக வரும். ஈரோடு இடைத்தேர்தலில் பண்ணையார் குடும்பம் வெற்றி பெறுதா? சாமானியன் வெற்றிபெறுகிறாரா என்று விரைவில் தெரியவரும்’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in