நிர்வாகிகள் குறித்து சர்ச்சை பேச்சு…பொன்னையனிடமிருந்து அமைப்பு செயலாளர் பதவி பறிப்பு: ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு

நிர்வாகிகள் குறித்து சர்ச்சை பேச்சு…பொன்னையனிடமிருந்து அமைப்பு செயலாளர் பதவி பறிப்பு: ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு

ஆடியோ சர்ச்சைக்கு மத்தியில் அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையனை நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அருகே வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் புதிய நிர்வாகிகளை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நியமனம் செய்துள்ளார். அதன்படி, அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், உள்பட 11 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாகிகள் பற்றிய பொன்னையன் பேசிய ஆடியோ வைரலான நிலையில், அது தனது குரல் அல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன் விடுவிக்கப்பட்டு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in