நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு; உச்சநீதிமன்றத்தை நாடிய சிவசேனா: தப்புமா உத்தவ் தாக்கரே அரசு?

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், சிவசேனா கட்சி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு சட்டசபை செயலாளர் ராஜேந்திர பகவத்துக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவை அடுத்து, 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில் ஆளுநரின் கோரிக்கை சட்டவிரோதமானது, நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கினை இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் ஏக்நாத் ஷிண்டே இன்று காலை அசாமின் முக்கிய நகரமான பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபட்டார், அங்கு அவர் நாளை மும்பை திரும்பவுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா வரவுள்ளனர். அவர்கள் மும்பை வருவதற்கு முன்பாக கோவாவுக்கு செல்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

முன்னதாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துவிட்டு மும்பை திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஏக்நாத் ஷிண்டே தனக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார், அவர்களில் 40 பேர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு சிவசேனா உறுப்பினர் இறந்துவிட்டதால் தற்போதைய எண்ணிக்கை 287 ஆக உள்ளது. தற்போது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

சிவசேனா (56), காங்கிரஸ்(44) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(53) ஆகிய கட்சிகளின் ஆளும் கூட்டணிக்கு 152 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 40 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லையென்றால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து விடும். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 106 உறுப்பினர்களும் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் 29 உறுப்பினர்களும் உள்ளனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in