
``அதிமுகவின் கொடியையும் பெயரையும் தொடர்ந்து பயன்படுத்துவோம்" என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக பதில் அளித்து இருக்கிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது, கட்சி அலுவலக முகவர், முத்திரை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது என ஓபிஎஸ்ஸுக்கு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்து ஐந்து பக்க நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார் ஓபிஎஸ்.
அதில், ‘அதிமுக கொடியையும் பெயரையும் தொடர்ந்து பயன்படுத்துவோம் அதிமுகவின் முதன்மைப் பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் சார்பில் அவரது வக்கீல்கள் ராஜலட்சுமி, கவுதம் சிவசங்கர் ஆகியோர் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில் மேலும், ‘ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். அடிப்படை உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கவும் தங்களுக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) அதிகாரம் இல்லை.
எனவே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸே சட்டவிரோதமானது. அதிமுக அலுவலக சாவியை ஒப்படைப்பது தொடர்பாக, உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட கருத்துகளை கீழ் நீதிமன்றம் கருத்தில் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கட்சி அலுவலகம் மீதான சட்டபூர்வமான உரிமைகளை இன்னும் நீதிமன்றம் தீர்மானிக்காதபோது, முகவரியை பயன்படுத்தியது குறித்து தாங்கள் கூறும் குற்றச்சாட்டும் தவறானது.
கட்சியின் அலுவலகம் முகவரி முத்திரை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்தக்கூடாது என்று தடை எதுவும் இல்லை. தற்போது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது செல்லாது. அதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி அதில் நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) அமர நினைப்பது நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவமதிக்கும் செயலாகும். நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) தான் கட்சியின் விதிகளுக்கு முற்றிலும் முரணாகவும், கட்சி நிறுவனரின் எண்ணங்களுக்கு எதிராகவும் செயல்படுகிறீர்கள். எனவே, கட்சி பொறுப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக இனிமேலும் இதுபோல தேவையற்ற கருத்துகளை தெரிவித்தால் தங்கள் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.