‘ஓபிஎஸ் நினைப்பது நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது’ - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

முன்னாள் அமைச்சர் உதயகுமார்
முன்னாள் அமைச்சர் உதயகுமார்

“அதிமுகவைத் தனது குடும்பச் சொத்தாக மாற்ற முயற்சிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சி, நான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை ஓபிஎஸ் தரப்பினர் நேற்று தங்களுக்கு ஆதரவாக திருப்பினர். இது ஈபிஎஸ் அணியின் முக்கிய தளகர்த்தரான அந்த மாவட்டச் செயலாளர் உதயகுமாருக்குப் பெரும் இக்கட்டை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஓபிஎஸ்சைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

"முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருகிறபோதெல்லாம் அதைத் தனக்கு சாதகமாக்கி முதலமைச்சர் பதவியில் அமர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ். சொந்த மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மாவுக்காக சட்டமன்றப் பதவியை தியாகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனைக் கட்சியிலிருந்து ஓரம் கட்டி, இன்றைக்கு அவர் திமுகவில் அடைக்கலமான சூழ்நிலை உருவானது ஏன் என்பதற்கான பதிலை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன்,

சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும்போது எல்லாம் பரிந்துரை செய்த டி.டி.வி.தினகரனை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த, பன்னீர்செல்வம் நடத்திய சித்து விளையாட்டுகளில் அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழியும் ஒன்று. ‘அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று, அம்மா மறைந்த இரண்டு மாதம் பிறகு அவர் பதவிக்கு ஆபத்துக்கு வந்த பிறகு குழப்பத்தை ஏற்படுத்தி அண்ணா திமுகவின் பிரிவிற்கு பிள்ளையார் சுழி போட்டது யார்? அன்றைக்குப் போட்ட பிள்ளையார் சுழி பிரிவினை என்பது இன்றுவரை ஒட்டாத கண்ணாடியாக என்றைக்கும் அந்த பிரிவினைக்குத் தொடர்ந்து தலைமை தாங்கி நடத்திவருபவர் ஓபிஎஸ் ஆவார்.

ஒரு மகாராணியைப் போல் இருந்தவர் சசிகலா. அவரை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியவர் ஓபிஎஸ். தன்னை முதல்வர் பதவிக்கு உயர்த்திய அண்ணன் தினகரனை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியவர் அவர். அரசியல் அடையாளம் இல்லாமல் இருந்த ஓபிஎஸ்சை அழைத்து துணை முதல்வர் பதவி அளித்தவர் எடப்பாடி பழனிசாமி.

பன்னீர்செல்வம் சிரிப்பில் அத்தனை அசுர குணங்களை மனதில் வைத்துக்கொண்டு, வெளித்தோற்றத்தில் காட்டும் மாயத் தோற்றம், அவரின் அரக்க குணம், அசுர குணம் ஆகியவற்றை மக்கள் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்றார்.

மேலும், “முதலமைச்சர் பதவி மீது அவர் கொண்ட வெறியின் காரணமாக, புரட்சித்தலைவர் உருவாகிய இயக்கத்தை, அம்மா பாடுபட்டு வளர்த்த இயக்கத்தை தனக்கும், தன் பிள்ளைக்கும் குடும்பச் சொத்தாக வேண்டும் என்பதற்காக, ஓபிஎஸ் நடத்தும் நாடகம் தான் அண்ணா திமுக ஒற்றுமையாக வர வேண்டும் என்ற நாடகம்.

‘கட்சி ஒற்றுமையாக சசிகலாவை மீண்டும் சந்திப்பேன்’ என்று அறிவித்திருக்கிறார். அவர் நிகழ்த்திவரும் நாடகத்தை நினைத்து சிரிப்பதா அழுதா தெரியவில்லை. சசிகலாவைச் சிறையில் தள்ளி, அரசியல் அனாதை ஆகியது சாட்சாச் பன்னீர்செல்வம் தான். சுயநல அரசியலில் மொத்த உருவம். தனக்குப் பதவி இல்லை என்று சொன்னால் இந்த கட்சியை அழிக்க தயாராகிவிடுவார். அதிமுகவை அழிக்காமல் ஓய மாட்டார் என்பதுதான் அவர் எடுத்துவரும் நடவடிக்கை காட்டுகிறது. இந்த இயக்கத்திற்கு என்ன தியாகம் செய்தார் என்பதை அவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

அதிமுகவை ஒழிக்கும் வரை ஓபிஎஸ் ஓயமாட்டார். அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்கும் முயற்சியில்தான் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார். அதிமுகவை அவரது குடும்பச் சொத்தாக மாற்றும் முயற்சி நான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது" என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in