எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணைய அறிவிப்பால் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

ஓபிஎஸ்
ஓபிஎஸ்எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணைய அறிவிப்பால் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததால், கட்சியின் பெயர், சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வுச் செய்யப்பட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் வைத்திருந்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ், பொதுச் செயலாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்தக் காலக்கெடு நாளையுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துக் கடிதம் வெளியிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் அது ஓ.பன்னீர் செல்வத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவைகளை அவர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிக்கேசி, கோலார் தங்க வயல், காந்தி நகர் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை மேற்கோள் காட்டிக் கொடி, சின்னம், கட்சியின் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னும் சசிகலா அதிமுக, சின்னம், கொடி போன்றவற்றைப் பயன்படுத்தவில்லையா?

அதுபோலத்தான் வழக்குகளை மேற்கோள் காட்டி ஓபிஎஸ் சமாளிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், திருச்சி மாநாட்டிற்கு அதிமுகப் பெயரையோ, சின்னம், கொடியையோ ஓபிஎஸ் பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in