ஓபிஎஸ் அணி அதிமுகவில் மதுரை மாநகர செயலாளர் நியமனம்: செல்லூர் ராஜூவை எதிர்த்து தாக்குப்பிடிப்பாரா முன்னாள் எம்.பி?

ஓபிஎஸ் அணி அதிமுகவில் மதுரை மாநகர செயலாளர் நியமனம்: செல்லூர் ராஜூவை எதிர்த்து தாக்குப்பிடிப்பாரா முன்னாள் எம்.பி?

ஓபிஎஸ் அணி அதிமுகவில் மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் அணிக்குத் திரட்டி கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பக்கம் மாவட்ட செயலாளர்களுக்குப் பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவில் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பா ஆகியோர் கூண்டோடு எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றனர். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 90 சதவீதம் பேரும் ஈபிஎஸ் பக்கம் சென்றனர்.
ஆனால், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மிக சிலரே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளராக மதுரையில் இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுகவுக்குச் சென்றார். அதபோல், முன்னாள் சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவிற்கு சென்றார். முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், ஈபிஎஸ் அணிக்குச் சென்றார். அதனால், மதுரையை பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஒரளவு அறிந்த முகமாக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மட்டுமே உள்ளார்.

இவர், தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுகவின் மதுரை மாநகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செல்லூர் கே.ராஜூவுக்கு எதிராக மாநகரில் அரசியல் செய்து வந்தார். அதனாலே இவரை மாநகர மாவட்டச் செயலாளராக ஓபிஎஸ் நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோபாலகிருஷ்ணன் மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்தவர்.

இவர் செல்லூர் ராஜூவை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை் ஓபிஎஸ் அணிக்கு கொண்டு வர முடியுமா, செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து மாநகரில் அரசியல் செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் தரப்பினர் கூறுகையில், ‘‘மாநகர செயலாளராக குறுநில மன்னர் போல் செல்லூர் ராஜூ 22 ஆண்டுகள் இருக்கிறார். அவர் இளைஞர்கள் யாரையும் கட்சியில் வளர்த்துவிடுவதில்லை. அவரைச் சுற்றி மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். அதனாலே, அதிமுகவில் இதற்கு முன் இருந்த பல இளம் நிர்வாகிகள் பலர் திமுக, பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளுக்குச் சென்றனர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் கோபாலகிருஷ்ணனை மாவட்டச் செயலாளராக நியமனம் செய்துள்ளதால் ஈபிஎஸ் அணியில் மதுரை மாநகர அதிமுகவில் செல்லூர் ராஜூ மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் தற்போது ஓபிஎஸ் பக்கம் திரும்ப தயாராகிவிட்டனர், ’’ என்றார்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘என்னைப் போன்ற அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள்தான் இனி மதுரை மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகளாக செயல்பட போகிறார்கள். அதற்காகதான் என்னைப் போன்ற இளைஞரை மாநகர மாவட்டச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார் ’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in