`இது எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரத்தின் உச்சநிலை'- மகன்கள் நீக்கத்தால் கொந்தளிக்கும் ஓபிஎஸ்

`இது எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரத்தின் உச்சநிலை'- மகன்கள் நீக்கத்தால் கொந்தளிக்கும் ஓபிஎஸ்

“அதிமுகவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்ட 18 பேரை நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அதிமுக சட்டப்படி செல்லாது” என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் உள்பட 18 பேரை நீக்குவதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். அந்த அறிக்கையில், வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ், கோவை, சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் வைரமுத்து, தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சைதை பாபு, தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 18 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர்களுடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

காமராஜர் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்திய ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாகப் பெருந்தலைவர் காமராஜர் இருந்து வருகிறார். அவரின் புகழ் நிலைத்து நிற்கும். இந்திய நாட்டின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. கல்வி, நீர்வளம், தொழில் என பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேற்றம் பெற திட்டங்களை தீட்டியவர். அவருக்கு அதிமுக சார்பாக புகழஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறோம்.

அதிமுகவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்ட 18 பேரை நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. இது எடப்பாடி பழனிசாமியினுடைய எதேச்சையான, தன்னிச்சையான முடிவு. எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அதிமுக சட்டப்படி செல்லாது” என்றார் காட்டமாக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in