
தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் விலக வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ஈபிஎஸ்சை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ‘’ ஓபிஎஸ் கட்சிக்கு எந்தவிதமான துரோகமும் செய்யவில்லை. துரோகம் செய்தது ஈபிஎஸ் தான். அவர் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
அதனால் அவர் பதவி விலக வேண்டும். சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் ஓபிஎஸ்சை விமர்சிக்க தகுதியே கிடையாது. உரிய நேரத்தில் தக்கப் பதிலடி அவருக்குக் கொடுப்போம்’’ என்றார்.