தினகரனை வரவேற்கக் குவிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: தேனியில் பரபரப்பு!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

தேனி மாவட்டத்தில் நடைபெறும் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என மூன்று அணிகளாக அதிமுக பிளவுற்றது. அதன்பிறகு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு நடைபெற்றாலும் இருதரப்பினரும் எண்ணெய்யும் தண்ணீருமாகவே ஒட்டாமல் இருந்து வந்தனர். ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என அதிமுக மீண்டும் பிளவுற்றது. இந்நிலையில் சசிகலா, ஓபிஎஸ் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் நிலவிவருகிறது.

தேனியில் தனியார் மண்டபத்தில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் தேனி மாவட்டத்திற்கு வந்தபோது, ஆண்டிபட்டி அருகே ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அதிமுக தேனி மாவட்டச் செயலாளருமான சையதுகான் தலைமையிலான குழுவினர் அவருக்கு மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றனர். அதிமுக கட்சிக்குள் சசிகலா மற்றும் தினகரன் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என ஏற்கெனவே தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுப்பி வைத்திருந்தவர் சையதுகான். தினகரன் அணிக்கு சையதுகான் தாவ இருக்கிறாரா அல்லது ஓபிஎஸ் தரப்பில் தூது செல்ல வந்தாரா என அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in