ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்: பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு!

ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்:  பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு!
ஓபிஎஸ் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டி போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுக தலைமையகம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள்.
அதிமுக தலைமையகம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செம்மலை, வளர்மதி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமையகத்திற்கு வர உள்ளதாக தகவல் வந்ததையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் உடனே தலைமையகத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றார். அவரைத் தொடர்ந்து ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் முடிவதற்குள்ளாகவே புறப்பட்டுச் சென்றனர்.

கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய ஜெயக்குமார், வளர்மதி.
கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய ஜெயக்குமார், வளர்மதி.

இதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து தீர்மான வரைவுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதில் வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செம்மலை, ஜெசிடி பிரபாகரன், வைகை செல்வன், ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன், தர்மர் ஆகியோர் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஜெயக்குமார் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அத்துடன் ஜெயக்குமாரின் வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டதால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன், " ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் நகமும் சதையுமாக இருப்பதாகவும், ஒற்றைத் தலைமை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை" என்றும் கூறினார்." இரட்டை தலைமையே தற்போது இருந்து வருவதாகவும், அதிமுகவில் குழப்பம் இல்லை.எனவே, திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்" என்று கூறினார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஒற்றைத் தலைமை குறித்து கூட்டத்தில் பேசவில்லை, எதுவாக இருந்தாலும் தலைமை முடிவு செய்யும். பொதுக்குழு வரை காத்திருங்கள், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்விட்டரில் அமைதிகாக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு கேட்டு மனு

இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அதிமுக பகுதி செயலாளர் பாசறை பாலச்சந்திரன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் 23-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடைபெறுவதையொட்டி இன்று கட்சி தலைமையகத்தில் ஆலோசனை நடத்துவதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். பின்னர் ஆலோசனை முடிந்து முக்கிய நிர்வாகிகள் காரில் புறப்பட்டு செல்லும் போது வெளியில் இருந்து வேனில் வந்த சில நபர்கள் கட்சி நிர்வாகிகளை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் பேசியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் நிர்வாகிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, கட்சி அலுவலகம் மற்றும் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in