”கசாப்புக்கடைக்காரனை நம்பிப் போகலாம். காமுகனை நம்பித்தான் போகக்கூடாது்’’ என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘’ஓபிஎஸ் அணியில் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்து வருகிறேன். எனக்கு மிரட்டல் விடுகிறார்கள். சமூக வலைதளத்தில் என்னைக்குறித்தும், ஓபிஎஸ் குறித்தும் அவதூறாக எழுதுகிறார்கள். தற்போது நான் இறந்து விட்டதாக செய்திகளை போட்டுள்ளனர்.
நான் இறந்தால் தான் பழனிசாமிக்கு லைஃப் என நினைக்கிறாரா? ஏன் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்பது தெரியவில்லை. இரண்டு நாட்களாக எனது நண்பர்கள் நலம் விசாரிக்கிறார்கள். வீட்டிற்கே வந்து சிலர் அழுகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
நாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை. பாஜகவின் மீதும் பிரதமர் மீதும் மரியாதை உள்ளது. அதனால் ஒரு நட்புணர்வோடு உள்ளோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தான் வேட்பாளரை திரும்பப் பெற்றோம். கசாப்புக்கடைக்காரருடன் போவதுகூட தப்பில்லை. ஆனால், காமுகன் கூட போவதுதான் தப்பு என்பதை ஜெயக்குமாருக்கு சொல்லிக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் ஓபிஎஸ்ஸை குறைசொல்லும் களமாக மாற்றி வருகின்றனர்.
இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டே 90% உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவினாரா இல்லையா பழனிசாமி? சின்னத்தை நாசம்பண்ணிவிட்டார்கள். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னென்ன ஊழல் நடந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஈரோடு தேர்தல் களத்திற்கு வரும். தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளாத இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை அண்ணாமலை எந்த அடிப்படையில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியவில்லை.
ஈரோட்டில் டெபாசிட் வாங்கவில்லை என்றால், அதிமுக தலைமை அலுவலக சாவி உட்பட அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் பழனிசாமி ஒப்படைக்க வேண்டும்’’ என்றார்.