``கால் கிலோ விஷத்தை வாங்கிக் குடித்துச் செத்தாலும் சாவோம் தவிர, எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்ல மாட்டோம்'' என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கட்சியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை ஓபிஎஸ் தொடர்ந்து தட்டினார். ஆனாலும், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது. உயர் நீதிமன்றமும், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்து அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அதுமட்டுமில்லாமல் மற்றொரு வழக்கில் அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ், அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் அதிமுக கொடி இன்றி பயணித்து வருகின்றனர். ஓபிஎஸ் வழக்கமாக அறிக்கை வெளியிடும் அதிமுக லெட்டர் ஹெட்டையும் பயன்படுத்துவது இல்லை. கட்சி கரை வேட்டிக்கு பதிலாக காவி வேட்டியை அணிந்து வருகிறார் ஓபிஎஸ். உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது செல்வராஜ் மதுரையில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி சூடு சுரணை என்றெல்லாம் பேசுவதற்கு அருகதையற்ற தலைவர். அவர் முதலமைச்சராக நான்கரை வருடங்கள் இருந்ததற்கு ஆதரவளித்தவர் ஓபிஎஸ்.
ஒருநாள் தனக்கு உதவி செய்தவரைக் கூட சொல் அளந்து பேச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், ஆட்சி முடிகிற வரை அண்ணன் அண்ணன் என்று கூழைக் கும்பிடு போட்டுவிட்டு, முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது ஓபிஎஸ் காலில் விழுந்து வணங்கிவிட்டு, இன்று திமுகவின் பி டீம் என்று சொல்கிறார்.
ஜெயலலிதாவின் உயிர் நாடி என்பது திமுக எதிர்ப்புத்தான். மூச்சை விடும் வரை திமுக எதிர்ப்பில் சமரசம் செய்து கொள்ளாதவர் ஜெயலலிதா. அவரே தனக்கு சோதனை வந்தபோது, தனது தலைப்பாகையை நம்பி இறக்கி வைத்த இடம் ஓபிஎஸ்ஸின் மடி தான். திமுக எதிர்ப்பில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பார் என்பது ஜெயலலிதா கொடுத்த அங்கீகாரம். ஓபிஎஸ் பற்றி தரம் தாழ்ந்து பேசும் செயலை எடப்பாடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஈரோட்டில் போய் சூடு, சுரணை இருந்தால், மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் என்றெல்லாம் பேசினார். சூடு சுரணை இருப்பவன் செய்யும் காரியமா கூவத்தூரில் காலில் விழுந்தது? மீசை வைத்தால் தான் ஆம்பளையா? ஆம்பளைக்கு மட்டும் தான் வீரமா? வேலு நாச்சியாருக்கு மீசை இல்லை, வீரம் இல்லையா? அதிமுகவை 5 முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய ஜெயலலிதாவுக்கு மீசை இல்லை. அவர் வீரம் இல்லாதவரா?
மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு என்னோடு வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். இதுவரை அவருக்கு எவ்வளவு மன்னிப்பு கடிதம் வந்திருக்கிறது என்பதை எடப்பாடி வெளியிடுவாரா? எங்கோ ஒருவர் விலை போகலாம். பயிருக்கு நடுவே களைகள் பிறக்கும். காசுக்கு போகிறவர்கள் போவார்கள். என்னைப் பொறுத்தவரை கால் கிலோ விஷத்தை வாங்கிக் குடித்துச் செத்தாலும் சாவோம் தவிர, எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்ல மாட்டோம்" என ஆவேசமாக கூறினார்.