
10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த ஜெயக்குமார். அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும், 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த 12-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில், “சமூக நீதிக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த தீர்ப்பை வரவேற்றாலும், ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை அந்த தீர்ப்பை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஈபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் இதைச் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்திவிட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.