'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்க நேரம் வந்துவிட்டது'- நீக்கத்தால் கொந்தளிக்கும் ஓபிஎஸ் மகன்கள்

ஓபிஎஸ் மகன்கள்
ஓபிஎஸ் மகன்கள்

ஓபிஎஸ்சின் மகன்கள் உள்பட அவரது ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ்சுக்கு எதிராக, ஓபிஎஸ்சின் மகன்களான ரவீந்திரநாத்தும் ஜெயபிரதீப்பும் கொந்தளித்திருக்கிறார்கள்.

கடந்த 11-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்தது. மேலும், பொதுச்செயலாளருக்கான தேர்தல் நான்கு மாதத்திற்குள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினார். இதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பலரும் காயம் அடைந்தனர்.

இச்சூழலில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை கட்சியின் அனைத்து அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்து கொண்ட ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுக்குழு முடிவடைந்ததும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். மேலும், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படாத வண்ணம் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் உதவியுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இப்படியாக பொதுக்குழு முடிவடைந்த பிறகு, ஓபிஎஸ் மகன்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், ஓபிஎஸ்சின் மூத்த மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மற்றும் அவரது இளைய மகனான ஜெயபிரதீப் ஆகியோர் தனித்தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஓ.பி. ரவீந்திரநாத் குமார் அறிக்கை
ஓ.பி. ரவீந்திரநாத் குமார் அறிக்கை

ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தனது அறிக்கையில், "என் அங்கீகாரம் நாடாளுமன்றத்தில்" என்று குறிப்பிட்டு பின்னர், "இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி… இது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி…" என்று கூறிவிட்டு, தொடர்ந்து, "கழக நிரந்தர பொதுச் செயலாளர் "அம்மா" அவர்கள் எனக்கு கொடுத்த வரம்… அதை நீக்கவும்… ஒதுக்கவும்… எடுக்கவும்… கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்… கொள்ளைப்புற வழிவந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம்!! பதவி கொடுத்தவர்களுக்கே.. பாதகம் விளைவித்த இடையில் வந்த 'எடை' யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்!! ஒன்றரை கோடி உண்மைத் தொண்டர்களே… ஒன்றிணைவோம்… ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்…" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்தியமே ஜெயம்" என்று கூறி தொடர்ந்து, "அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும், நேர்மையாக மக்கள் பணி செய்து யாருடைய நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் உடல் வருந்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியும், கிண்டலும், பொய்களும், விமர்சனங்களும், சூழ்ச்சிகளும், துரோகங்களும் எதிர் கொள்ளும் போது, என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது.

ஜெயபிரதீப் அறிக்கை
ஜெயபிரதீப் அறிக்கை

2001- ம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன். எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு, காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கழக சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in