நானும் அதிமுக தான்... என் உடம்பிலும் கட்சி ரத்தம் தான் ஓடுகிறது!

ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் திடீர் ஆவேசம்
ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்
ஐடி விங் அடித்த போஸ்டர்
ஐடி விங் அடித்த போஸ்டர்

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதற்கு முன்னதாகவே ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப்பை நேரடி அரசியலுக்கு வரச்சொல்லி அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரம் ஏரியாவில் பற்றவைத்த பரபரப்பு இப்போது வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது.

அண்ணன் ரவீந்திரநாத் குமார் நேரடி அரசியலில் ஈடுபட்டு எம்பி-யாகி விட்டாலும் தம்பியான ஜெயபிரதீப் நேரடி அரசியலை போர்த்திக் கொள்ளாமல் இன்னமும் ஆன்மிகவாதியாகவே வலம் வருகிறார். ஆன்மிக விஷயங்களில் அதீத நாட்டம் கொண்ட ஜெயபிரதீப்பை 'ஆன்மிக செம்மல்' என்றே அழைக்கிறது அவரது விசுவாசவட்டம்.

இந்த நிலையில், கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆன்மிக விழாக்களில் கலந்துகொண்டார் ஜெயபிரதீப். பெரும்பாலும் தேனியைவிட்டு தாண்டாத பிள்ளை இன்னொரு மாவட்டத்திற்கு ஆன்மிக பயணம் போனது அப்போது அனைவராலும் உற்றுக் கவனிக்கப்பட்டது. ஆன்மிக பயணம் என்றாலும் அதிமுக கட்சிப் போஸ்டர் போல ஜெயபிரதீப்புக்கு போஸ்டர் ஒட்டிய அவரது விசுவாசிகள், ஜெயபிரதீப்பின் படத்தை பெரிதாக போட்டும், போஸ்டரின் அடியில் ‘தகவல் தொழில்நுட்பப் பிரிவு’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிகழ்வுகளில் ஜெயபிரதீப் உடன் அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஜெயபிரதீப்புக்கு அதிமுக ஐடி விங்க் சார்பில், அவரது போட்டோவை பெரிதாக போட்டு அடிக்கப்பட்ட போஸ்டர் குறித்து, அந்த விங்கைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரே தலைமைக்கு புகார் அனுப்பினாராம். இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட அதிமுக ஐடி விங் மண்டல பொறுப்பாளர் ராஜ் சத்யன் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமியை தொடர்புகொண்டு இதுபற்றி விசாரிக்கச் சொன்னாராம். ஓபிஎஸ் ஆதரவாளரான முனியசாமியோ, இந்த விவகாரத்தில் அதிகம் ஆர்வம் காட்டாமல், போஸ்டர் அடித்த ஐடி விங் நிர்வாகிகளிடம் ஒப்புக்கு விசாரணை நடத்தி பிரச்சினையை கமுக்கமாக முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

எஸ்.என். சோலைமுருகன்
எஸ்.என். சோலைமுருகன்

இதனிடையே, தனக்காக போஸ்டர் அடித்த தனது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தியது தெரிந்ததும், “ நானும் அதிமுக தான்... என் உடம்பிலும் கட்சி ரத்தம் தான் ஓடுகிறது” என டென்ஷன் ஆன ஜெயபிரதீப், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாந்தமாக ஒரு அறிக்கையை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், ’நான் கலந்து கொண்டது கட்சி நிகழ்ச்சி அல்ல; தனிப்பட்ட நிகழ்ச்சி. எனது படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என பலமுறை சொல்லிவிட்டேன். ஆனாலும் ஆர்வக் கோளாறினால் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்து விடுகிறது. என்னால் கட்சிக்கோ எனது ஆதரவாளர்களுக்கோ எவ்வித சங்கடங்களும் நிகழக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். நான் அரசியல்வாதியாக உங்களுக்கு பயன்படுகிறேனோ இல்லையோ நல்ல நண்பனாக எப்போதும் பயன்படுவேன்’ என தெரிவித்தார் ஜெயபிரதீப்.

ஆனாலும் இந்த விவகாரத்தை சிலர் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜெயபிரதீப் ஆதரவாளரும், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக ஐடி விங் துணைச் செயலாளருமான எஸ்.என். சோலைமுருகன், “ கட்சி நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கெடுக்காவிட்டாலும் ஜெயபிரதீப்பையும் அதிமுகவையும் பிரித்துப் பார்க்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக எம்ஜிஆர்., அம்மா, அண்ணா நினைவிடங்களில் தினமும் தனது சொந்த செலவில் பூ அலங்காரம் செய்து வருகிறார் ஜெயபிரதீப்.

அதிமுகவில் 22 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் அவர், பதவியில் இல்லாவிட்டாலும் கட்சியினருக்கு மருத்துவ உதவி, படிப்புச் செலவு உள்ளிட்ட காரியங்களுக்கு சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார். கட்சிப் பதவி வாங்குவது அவருக்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல. அவர் பதவி வேண்டாம் என்றுதான் சொல்கிறார். எங்களைப் போன்றவர்கள் தான் அவருக்கு கட்சியில் பதவி கொடுத்து அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்கிறோம்” என்று சொன்னார்.

கும்பாபிஷேக நிகழ்வில்  ஜெயபிரதீப் ...
கும்பாபிஷேக நிகழ்வில் ஜெயபிரதீப் ...
ஜெயபிரதீப் வெளியிட்ட அறிக்கை - பக்கம் 1
ஜெயபிரதீப் வெளியிட்ட அறிக்கை - பக்கம் 1
ஜெயபிரதீப் வெளியிட்ட அறிக்கை - பக்கம் 2
ஜெயபிரதீப் வெளியிட்ட அறிக்கை - பக்கம் 2

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஜெயபிரதீப் நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என சமூக வலைதளங்களில் தொடந்து சிலர் பதிவிடத் தொடங்கி இருக்கிறார்கள். இதுகுறித்தெல்லாம் தேனி மாவட்ட அதிமுகவினர் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய அவர்களில் சிலரிடம் பேசினோம். “மூத்தமகன் ரவீந்திரநாத் குமாரை கடும் போட்டிகளுக்கு நடுவில் எம்.பி-யாக்கிவிட்டார் ஓபிஎஸ். அதேபோல் இளைய மகனையும் எம்எல்ஏ, அமைச்சர் என உட்காரவைத்து அழகுபார்க்க நினைக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள். மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத் குமாரை ஜெயிக்கவைத்ததில் ஓபிஎஸ்சின் பண பலம் எந்தளவுக்கு கைகொடுத்ததோ அதைக்காட்டிலும் ஒருபடி மேலாகவே ஆன்மிகச் செம்மல் ஜெயபிரதீப்பின் ஆன்மிக சேவைகளும் கைகொடுத்ததை மறுக்கமுடியாது. அந்தவிதத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நிறுத்தினாலும் ஜெயபிரதீப் நிச்சயம் வெற்றி பெறுவார். ஆனாலும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது என்பதால் அமைதியாகவே அடியெடுத்து வைக்கிறார். அவரது அமைதியையும் பணிவையும் பலஹீனம் என்று யாராவது நினைத்தால் நிச்சயம் தோற்றுப் போவார்கள். ஏனென்றால், ஓபிஎஸ் மாதிரி இல்லை இந்தத் தம்பி” என்று சொன்னார்கள் அவர்கள்.

சசிகலா ஆன்மிக பயணங்கள் மூலம் அதிமுகவுக்குள் தனக்கான ஆதரவை திரட்ட முயற்சித்து வரும் நிலையில், அவ்வப்போது அவருக்கு ஆதரவாக பேசும் ஓபிஎஸ் குடும்பத்திலிருந்து ஒரு ஆன்மிக அரசியல்வாதி புறப்படுவதாகச் சொல்கிறார்கள். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in