`அதிமுக சட்டவிதியை மாற்றுவது அபாயகரமானது'- எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த ஓபிஎஸ்

`அதிமுக சட்டவிதியை மாற்றுவது அபாயகரமானது'- எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த ஓபிஎஸ்

எம்ஜிஆர் வகுத்த அதிமுக சட்டவிதியை மாற்றுவது அபாயகரமானது என்றும் அந்த சட்டவிதியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறினார்.

அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கட்சியின் கொடியை ஏற்றினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.நகர் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் அதிமுகவின் கட்சி கொடியேற்றியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பங்கேற்றார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர்.

சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் சட்டப்பேரவை நாளை வரை தள்ளிவைக்கப்பட்டது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் உட்கார்ந்திருந்தார். இதன் பின்னர் சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,

சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இன்று, சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்று குறித்தும் எங்களுக்கு தகவல் வந்தது. அந்த அடிப்படை அதிமுக சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கெனவே சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக சபாநாயகரை சந்தித்தோம். அலுவல் ஆய்வுக்குழுவை பொறுத்தமட்டில் இன்று அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

உங்களை மாற்றி உதயகுமாரை அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவராக்கவும், உங்கள் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி உட்கார விருப்பம் இல்லை என்றும் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், "நாங்கள் இன்றைக்கு சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். மற்றபடி அவர்கள் பற்றிய கேள்விகளை அவர்களிடம் தான் நீங்கள் பதிலை பெற வேண்டும்" என்றார்.

அதிமுகவின் 51-வது நிறைவு விழாவில் தனித்தனியாக கொடி ஏற்றுகிறீர்களே. இது சரியா? இந்த கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் அதிமுகவை உருவாக்கி மூன்று முறை முதலமைச்சராகி நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொடுத்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் இயக்கத்திற்கு மிகப்பெரிய வலுவையும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய மரியாதையையும் பெற்று 16 ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்தார். சமூக பொருளாதார நிலைகளில் நடுநிலையாக நின்று சமூக பாதுகாப்பு திட்டங்களை மக்கள் நலன் கருதி இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக முன்னணி முதலமைச்சராக ஜெயலலிதா பணியாற்றினார் என்பதனை நாம் நன்றாக அறிவோம். இந்த இரு தலைவர்களும் அதிமுகவுக்கு செய்த தியாகங்கள் ஏராளம்.

அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் இந்த இயக்கம். புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்டம் கழக சட்ட விதியை அப்படியே புரட்சி தலைவி ஜெயலலிதாவும் அடிபிறழாமல் கட்டி காப்பாற்றிய மாண்பு வரலாறு. பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக சட்ட விதிகளை ஜெயலலிதா கடைப்பிடித்த அந்த விதியை எந்தவித மாற்றமும் இல்லாமல் காப்பாற்றக்கூடிய பொறுப்பில்தான் நாங்கள் இன்று நின்று கொண்டிருக்கிறோம். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் எவ்வளவு அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதை கட்டி காப்பாற்றுகின்ற சேவர்களாக இன்றைக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கிற அனைத்து பொது மக்களும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரை பொருத்தவரை தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் துண். இந்த இயக்கத்தின் ஆணிவேர். இந்த தொண்டர்களுக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை தந்திருக்கிறார். ஒரு சாதாரண தொண்டன்கூட இந்த இயக்கத்தில் தலைமை பொறுப்பிற்கு வர முடியும் என்ற சட்டவிதியை வகுத்து தந்திருக்கிறார். இப்போது இருக்கிற கட்சியின் சட்ட விதிகளை மாற்றப்படுகின்ற சூழல் அபாயகரமான சூழல். புரட்சித்தலைவர் எண்ணத்திற்கு மாறுபட்டு ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு மாறுபட்டு செயல்படுகின்றனர்.

கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வரக்கூடியவர்கள் மாவட்ட கழகச் செயலாளர் முன்மொழி வேண்டும் என்றும் 10 மாவட்ட கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும் அந்த பொறுப்புக்கு போட்டியிடுகிறவர்கள் 5 ஆண்டு காலம் தலைமைக் கழக நிர்வாகிகளாக பணியாற்றி இருக்க வேண்டும் என்றும் என்பது சட்டவிதி. எம்ஜிஆரால் கொண்டு வரப்படட அந்த சட்டவிதியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in